விமான கழிப்பறைகள் தண்ணீரே இல்லாமல் எப்படி இயங்குதுன்னு தெரியுமா?
பொதுவாக நாம் வீட்டில் பயன்படுத்தும் கழிப்பறையில் தண்ணீர் மூலம் தான் கழிவுகள் சுத்தம் செய்யப்படுகின்றது.
ஆனால் விமானத்தில் தண்ணீருக்கு பதிலாக காற்று தான் இந்த வேலையை செய்கின்றது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? காற்று எப்படி கழிவுகளை சுத்தம் செய்யகின்றது என்று குழப்பமாக உள்ளதா?

விமானத்தில் கழிப்பறையில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் மற்றும் சுத்தம் செய்யும் முறை குறித்து விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
பெரும்பாலானவர்களுக்கு விமானக் கழிவுகள் வானத்தில் பறக்கும்போதே வெளியேற்றப்படுகின்றது என்ற தவறான புரிதல் காணப்படுகின்றது.

ஆனால் உண்மையில் விமானத்தின் கழிப்பறையில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமானது சாதாரண கழிப்பறையில் இருந்து முற்றிலும் வேறுப்பட்டது.
விமானத்தில் அதிக அளவு தண்ணீரை எடுத்துச் செல்வது விமானத்தின் எடையை அதிகரித்துவிடும் என்பதால், விமானத்தில் கழிப்பறையில் கழிவுகளை சுத்தம் செய்ய தண்ணீர் பயன்படுத்தப்படுவது கிடையாது.

வெற்றிடக் கழிவறை
எனவே விமானங்களில் 'வெற்றிடக் கழிவறை' தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. குப்பைகளை உறிஞ்சும் 'வாக்கும் கிளீனரில் உள்ள அதே முறை தான் இங்கும் செயல்படுகின்றது.
அதாவது விமானம் சுமார் 30,000 அடி உயரத்தில் பறக்கும்போது, விமானத்திற்கு வெளியே உள்ள காற்றழுத்தம் மிகவும் குறைவாக இருக்கும். ஆனால் பயணிகளின் வசதிக்காக விமானத்திற்குள் காற்றழுத்தம் சீராக பராமரிக்கப்படும்.

நீங்கள் விமானத்தின் கழிப்பறையில், ஃபிளஷ் பட்டனை அழுத்தும்போது, அழுத்தம் (pressure) காரணமாக கழிவுகள் உடனடியாக இழுக்கப்பட்டு, விமானத்தின் பின்புறத்தில் உள்ள ஒரு சிறப்பு தொட்டிக்கு அனுப்பப்படுகிறது.
அதாவது, கழிப்பறையில் 'Flush' பட்டனை அழுத்தும் போது, கழிவுத் தொட்டிக்கும் வெளிப்பக்கத்திற்கும் இடையே ஒரு சிறிய வால்வு திறக்கப்படுகிறது. அப்போது, விமானத்திற்கு உள்ளே இருக்கும் அதிக அழுத்தக் காற்று வேகமாக கழிவுகளை உறிஞ்சிக்கொண்டு, விமானத்தின் அடியில் உள்ள கழிவு தொட்டிக்குள் கழிவுகளை தள்ளிவிடும்.

கழிவுகளை உறிஞ்சுவதற்காகவே மோட்டார்கள் (Vacuum Pumps) விமானத்தின் கழிவறையில் பொருத்தப்பட்டிருக்கும். விமானம் குறிப்பிட்ட உயரத்திற்குச் சென்ற பிறகு, இந்த மோட்டார் நின்றுவிடும். அதன்பின் இயற்கையான காற்றழுத்தமே வேலையைத் தொடரும்.
அனைத்து கழிவுகளும் விமானத்தின் அடிப்பகுதியில் உள்ள ஒரு பெரிய சேகரிப்புத் தொட்டியில் சேமிக்கப்படுகின்றன. விமானம் தரையிறங்கிய பிறகே, சேமிக்கப்பட்ட கழிவுகள் இருக்கும் தொட்டி சிறப்பு வாகனங்கள் மூலம் சுத்தம் செய்யப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |