தலை முடி எப்படி வளர்கிறது? தெரிந்து கொள்ளுங்கள்
முடியின் வளர்ச்சி மூன்று பருவங்களைக் கொண்டது. ‘அனாஜன்’ (Anagen) என்பது வளரும் பருவம். ஒரு முடியானது தினமும் சராசரியாக அரை மில்லி மீட்டர் நீளத்துக்கு வளர்கிறது. இந்த வளர்ச்சிப் பருவம் 3 முதல் 7 வருடங்கள்வரை நீடிக்கும். அடுத்தது ‘கெட்டாஜன்’ (Catagen).
இதில் முடி இயற்கையாகவே உதிர ஆரம்பிக்கும். இந்தப் பருவம் 2 வாரங்களுக்கு நீடிக்கும். மூன்றாவது பருவம் ‘டீலாஜன்’ (Telogen). இது முடி ஓய்வெடுக்கும் பருவம். இது சுமார் 2 முதல் 4 மாதங்கள்வரை நீடிக்கும். இந்தச் சுழற்சி முடிந்து, மீண்டும் வளர்ச்சிப் பருவத்துக்குத் திரும்பும்.
முடி உதிர்ந்த இடத்தில் புதிதாக வேறு முடி முளைக்கும். தலையில் இருக்கும் முடியின் ஆயுள் அதிகபட்சம் 94 வாரங்கள். வயதானவர்களுக்கு இது 17 வாரங்களுக்குக் குறைந்துவிடும்.
தலைமுடி ஒவ்வொன்றும் ஒவ்வொரு பருவத்தில் இருக்கும். பெரும்பாலான முடிகள் வளரும் பருவத்தில் இருந்தால், முடி தொடர்ந்து வளரும். உதிரும் பருவத்தில் அதிக முடிகள் இருந்தால், முடி கொட்டும். தினமும் சராசரியாக 100 முடிகள் உதிர்வது இயற்கை.
பெண்கள் தலை சீவும்போது 20 முடிகள்வரை கழிந்தால் கவலைப்பட வேண்டாம். இதற்கு மேல் முடி உதிர்கிறது என்றால் அதைக் கவனிக்க வேண்டும்.
பெரும்பாலான விலங்குகளுக்கு முடியானது கரடுமுரடாகவும், அடர்த்தியாகவும் இருக்கிறது. அவற்றின் முடிகளுக்குத் தொடுவுணர்வு உண்டு. இதன் பலனாக அவை இருட்டான இடங்களுக்கும் செல்ல முடிகிறது.
பல விலங்குகளுக்கு அவை வாழும் சூழலுக்கு ஏற்ற வகையில் முடியின் நிறம் அமைந்துள்ளது. இது எதிரிகளிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள உதவுகிறது. விலங்குகளில் முள்ளம்பன்றியின் முடி மட்டும் தனித்துவமானது. நீண்ட முட்களாக உள்ளது.