ரெஸ்டூரண்ட் பாணியில் அசத்தல் தேங்காய் சட்னி வேண்டுமா? இந்த பொருட்களை சேர்த்தால் போதும்
பொதுவாகவே இந்தியர்களின் உணவுமுறைப்படி காலையில் இட்லி, தோசைக்கு தொட்டுக்க சட்னி செய்வது வழக்கம்.
சட்னி என்றாலே பெரும்பாலும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி இவை இரண்டில் ஒன்றைத்தான் பெரும்பாலும் செய்வார்கள்.
எப்போதும் போல வழமையான முறையில் தேங்காய் சட்னி செய்யாமல் அடுத்த முறை சட்னி செய்யும்போது இந்த பொருட்களையும் கலந்து செய்தால் ரெஸ்டூரண்ட் பாணியில் அருமையான சுவையில் தேங்காய் சட்னி கிடைக்கும். எப்படி செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
தேங்காய் - ½ மூடி
பச்சை மிளகாய் - 3
நிலக்கடலை - ஒரு கைப்பிடி
பொட்டுக்கடலை - 2 மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி
சின்ன வெங்காயம் - 5
சீரகம் - ½ தே.கரண்டி
இஞ்சி - சிறிதளவு
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க தேவையானவை
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடுகு - ¼ தே.கரண்டி
உடைத்த உளுந்து - ¼ தே.கரண்டி
கடலைப்பருப்பு - ½ தே.கரண்டி
கருவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
முதலில் அரை முடி தேங்காயை துருவியோ அல்லது நறுக்கியோ எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் சின்ன வெங்காயத்தை நறுக்கி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும், நிலக்கடலையை சேர்த்து நன்றாக வறுத்து ஆற வைத்து தோல் நீக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதே பாத்திரத்தில் கடலை பருப்பை சேர்த்து மிதமான தீயில் நிறம் மாறாமல் நன்றாக வறுத்து ஆறவைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து இஞ்சியின் தோலை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், வறுத்த நிலக்கடலை, மற்றும் கடலை பருப்பு, பொட்டுக்கடலை, சின்ன வெங்காயம், சீரகம், இஞ்சி, மற்றும் புளி மற்றும் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்ணெய் சேர்த்து, சூடானதும் கடுகு சேர்த்து பொரிய விட்டு,அதனுடன் உடைத்த உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து,அதனுடன் சிறிதளவு கருவேப்பிலை மற்றும் வர மிளகாயை சேர்த்து நன்றாக தாளித்துக்கொள்ள வேண்டும்.
இறுதியாக அதனை சட்னியுடன் கலந்தால் ரெஸ்டூரண்ட் பாணியில் அசத்தல் தேங்காய் சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |