Diwali special: மொறுமொறுன்னு ரிப்பன் பக்கோடா... வெறும் 10 நிமிடத்தில் எப்படி செய்வது?
தீபாவளி பண்டிகையின் போது விதவிதமாக பலகாரங்கள் செய்து வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் அயலர்களுக்கு கொடுத்து மகிழ்வது வழக்கம்.
முன்னைய காலங்களில் கிராமங்களில் தான் தீபாவளி பலகாரங்கள் தயாரிப்பார்கள் ஆனால் இப்போது நகர வீடுகளிலும் விதவிதமான பலகாரங்கள் தயாரிக்க ஆரம்பித்துவிட்டனர்.
மற்ற நாட்களில் பலகாரங்களைக் கடைகளில் வாங்கும் நாம், பண்டிகை நாட்களிலாவது ஆரோக்கியமாகச் சாப்பிடலாம்.
அப்படி இந்த தீபாவளிக்கு வெறும் 10 நிமிடங்களில் தயாரிக்ககூடிய ரிப்பன் பக்கோடா எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
அரிசி மாவு - 1 கப்
கடலை மாவு - 1/4 கப்
பொட்டுக்கடலை மாவு - 1/4 கப்
உப்பு - 1/2 தே.கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தே.கரண்டி
பெருங்காயத் தூள் - 1/4தே.கரண்டி
எள்ளு - 1 தே.கரண்டி
சூடான எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
தண்ணீர் - 1 கப்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு மற்றும் கடலை மாவை ஒன்றாக எடுத்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் பொட்டுக்கடலை மாவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.அதனையடுத்து அதில் உப்பு, மிளகாய் தூள், பெருங்காயத் தூள் மற்றும் எள்ளு விதைகளை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அதனுடன் சூடான எண்ணெயை ஊற்றி, கரண்டியால் நன்கு கிளறி விட வேண்டும். பின் கை பொறுக்கும் சூட்டிற்கு வந்ததும்,கைகளால் பிசைந்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நீரை சேர்த்து, மிகவும் இறுக்கமாக இல்லாமல், ஓரளவு இறுக்கமாக, அதே சமயம் மென்மையாக பிசைந்து மாவை தயார் செய்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பின்பு முறுக்கு உழக்கை எடுத்து, அதில் ரிப்பன் பக்கோடா அச்சை எண்ணெயில் நேரடியாக பிழிந்துவிட்டு, பொரித்து எடுத்தால், அவ்வளவு தான் சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த ரிப்பன் பக்கோடா தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |