ஊளைச்சதையை கரைக்கும் அற்புத கஞ்சி: தினமும் காலையில் சாப்பிட்டால் என்ன நடக்கும்?
ஊளைச்சதைகளைக் குறைத்து உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் தானியங்களில் மிக முக்கியமானது கொள்ளுப் பயறு.
அதை வைத்து எப்படி கஞ்சி செய்யலாம், அதன் பயன்கள் என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்.
கொள்ளு பார்லி கஞ்சி செய்வது எப்படி?
தேவையான பொருள்கள்
- கொள்ளு வறுத்து பொடித்தது - 2 ஸ்பூன்
- பார்லி வறுத்து பொடித்தது - 1 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- சீரகம் - அரை ஸ்பூன்
- மிளகுத்தூள் - கால் ஸ்பூன்
- பூண்டுப்பற்கள் இடித்தது - 2
- கொத்தமல்லி இலைகள்
செய்முறை
கொள்ளுப் பொடி மற்றும் பார்லி பொடியுடன் 3 கப் அளவுக்குத் தண்ணீர் சேர்த்து, அதோடு உப்பும் சேர்த்து நன்கு நீர்க்கக் கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு இரண்டு பொடியும் வேகும்வரை காய்ச்ச வேண்டும்.
கலவை கொதிக்க ஆரம்பித்ததும் அதில் சீரகமும் இடித்த பூண்டும் சேர்த்துக் கொள்ளலாம்.
கஞ்சி நன்கு வெந்து ஒன்றரை கப் அளவுக்கு சுண்டி வந்ததும் அடுப்பை அணைத்து விடலாம்.
கொத்தமல்லி இலைகளைத் தூவி பருகலாம். இந்த சத்து மிகுந்த கஞ்சியை காலை நேர உணவாக தொடர்ந்து ஒரு மாதம் எடுத்து வந்தால் உடலில் ஏராளமான நல்ல மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை கண்கூடாக உணர்வீர்கள்.
கொள்ளை எப்படி சேர்த்துக் கொள்ளலாம்?
- கொள்ளை வாரத்தில் இரண்டு நாட்களாவது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் சாப்பிட்டு வருவது நல்லது.
- எடையைக் குறைப்பதற்காக சாப்பிடுகிறவர்கள் சிறிது சிறிதாக வாரத்திற்கு 4 நாட்கள் கூட எடுத்துக் கொள்ளலாம்.
- பருப்பு பொடி போல பொடியாகவோ, துவையலாக செய்தோ, சூப் வைத்தோ, கஞ்சியாக செ்யதோ சாப்பிடலாம்.
- அதேபோல கொள்ளை ரசம் வைத்து சாப்பிட பருவ கால சளி பிரச்சினைகள் ஓடிப் போகும்.
- இரவு முழுவதும் கொள்ளை ஊற வைத்து காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் அந்த தண்ணீரை குடித்து, கொள்ளை வேகவைத்தோ பச்சையாகவோ சாப்பிட்டு வர பலன் அதிகமாகக் கிடைக்கும்.
பாார்லியின் பயன்கள்
பார்லி அரிசி மற்றும் கோதுமையைப் போன்ற ஒரு தானியம் தான்.
தெற்காசிய நாடுகள் மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் பார்லி அதிகமாக சாப்பிடப்படுகிறது. பார்லியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.
பார்லியில் வைட்டமின் சி, நீரில் கரையும் நார்ச்சத்துக்களும், நுண்ணூட்டச்சத்துக்களும் அதிகமாக இருக்கின்றன. பார்லி உடல் எடையைக் குறைத்து உடலை உறுதியாக்கும். புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது.
குறிப்பாக, குடல் மற்றும் மார்பகப் புற்றுநோயை வராமல் தடுக்கச் செய்கிறது. சிறுநீரகங்களின் செயலை வேகப்படுத்துகிறது. பித்தப்பை கற்களை நீக்கும்.
நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது. ரத்த சோகையை நீக்கும். மலச்சிக்கலைத் தீர்க்கும் குறிப்பாக கர்ப்ப காலத்தில் பார்லியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.