உலகின் பவர்ஃபுல் பாஸ்போர்ட்; 192 நாடுகளுக்கு விசா இல்லாமலேயே செல்ல முடியுமாம்!
ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் குடியுரிமை மற்றும் குடியேற்றம் ஆகியவை குறித்த ஆலோசனைகளை ஹென்லி & பார்ட்னர்ஸ் (Henley & Partners) வெளியிடுவது வழக்கம். இந்நிறுவனம், உலகின் வலிமையான பாஸ்போர்ட்களை கொண்டிருக்கும் நாடுகளை தரவரிசைப்படுத்துவதே இந்த ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் மதிப்பீடு ஆகும்.
இதனிடையே, 2022-ம் ஆண்டிற்கான உலகின் வலிமையான பாஸ்போர்ட்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது ஹென்லி & பார்ட்னர்ஸ் நிறுவனம். இந்த பட்டியலில் மொத்தம் 111 நாடுகளின் பாஸ்போர்ட்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், உலகமெங்கும் பரவிவரும் கொரோனா காரணமாக பல்வேறு நாடுகள் வெவ்வேறு விதமான பயண கட்டுப்பாடுகளை விதித்துவருகின்றன.
ஆனால், இதுபோன்ற தற்காலிக கட்டுப்பாடுகளை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என ஹென்லி & பார்ட்னர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில், இந்த பட்டியலில் இந்தியாவின் பாஸ்போர்ட்டிற்கு 83-வது இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்திய பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்கள் 60 நாடுகளுக்கு விசா எடுக்காமல் பயணிக்கலாம் எனவும் இந்த இன்டெக்சில் தெரிவித்துள்ளது.
டாப் 10 பவர்புல் பாஸ்போர்ட்கள்
1. ஜப்பான், சிங்கப்பூர் (192) 2. ஜெர்மனி, தென் கொரியா (190) 3. பின்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க், ஸ்பெயின் (189) 4. ஆஸ்திரியா, டென்மார்க், பிரான்ஸ், நெதர்லாந்து, ஸ்வீடன் (188) 5. அயர்லாந்து, போர்ச்சுகல் (187) 6. பெல்ஜியம், நியூசிலாந்து, நார்வே, சுவிட்சர்லாந்து, ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா (186) 7. ஆஸ்திரேலியா, கனடா, செக் குடியரசு, கிரீஸ், மால்டா (185) 8. போலந்து, ஹங்கேரி (183) 9. லிதுவேனியா, ஸ்லோவாக்கியா (182) 10. எஸ்டோனியா, லாட்வியா, ஸ்லோவேனியா (181)
உலகின் வலிமை குறைந்த பாஸ்போர்ட்களை கொண்டிருக்கும் நாடுகள்
104. வட கொரியா (39)
105. நேபாளம் மற்றும் பாலஸ்தீனிய பிரதேசங்கள் (37)
106. சோமாலியா (34)
107. ஏமன் (33)
108. பாகிஸ்தான் (31)
109. சிரியா (29)
110. ஈராக் (28)
111. ஆப்கானிஸ்தான் (26)