கிராமத்து பாணியில் ஆரோக்கியம் நிறைந்த நண்டு ரசம்... இப்படி செய்து பாருங்க
பொதுவாகவே ரசம் என்றால் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
அதிலும் நண்டு ரசம் என்றால் சொல்லவே தேவையில்லை, குறிப்பாக கிராமத்து பாணியில் செய்யும் நண்டு ரசத்தின் மணத்துக்கே பசி எடுக்க ஆரம்பித்துவிடும்.
நண்டு ரசம் சுவையில் மட்டுமல்லாது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
சளி, இருமல், காய்ச்சல், உடல் வலி, உடல் சோர்வு போன்றவற்றை நீக்கும். மேலும் எலும்பு மற்றும் நரம்பு ஆரோக்கியத்திற்கு நண்டு ரசம் பெரிதும் துணைப்புரிகின்றது.
ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்கும் நண்டு ரசத்தை கிராமத்து பாணியில் அட்டகாசமான சுவையில் எவ்வாறு தயாரிக்கலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ஆற்று நண்டு - 5
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 6 பல்
மிளகாய் - 5 அல்லது காரத்திற்கு ஏற்ப
திப்பிலி - 4
மிளகு - 1 தே.கரண்டி
சீரகம் - 1 ½ தே.கரண்டி
வால் மிளகு - ½ தே.கரண்டி
சோம்பு - ¼ தே.கரண்டி
அன்னாசி பூ - 2
கொத்தமல்லி விதை - ¼ தே.கரண்டி
தக்காளி - 1
சின்ன வெங்காயம் - 8 தொடக்கம் 10
நல்லெண்ணெய் - தேவையான அளவு
கடுகு - ¼ தே.கரண்டி
கருவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
மஞ்சள் தூள் - ¼ தே.கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
செய்முறை
முதலில் ஆற்று நண்டை நன்றாக சுத்தம் செய்து உரலில் போட்டு இடித்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் சின்ன வெங்காயம் மற்றும் இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் அல்லது அம்மியில் இஞ்சி, பூண்டு, மிளகாய், திப்பிலி, மிளகு, சீரகம், வால் மிளகு, அன்னாசி பூ, சோம்பு மற்றும் கொத்தமல்லி விதைகள் ஆகிய அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துககொள்ள வேண்டும்.
அதனையடுத்து தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தை உரலில் போட்டு நன்றாக இடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும், கடுகு சேர்த்து பொரிந்ததும், நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் இடித்து வைத்த வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்து பச்சை வாசம் போகும் வரையில் வதக்கிய பின் அதனுடன் இடித்து வைத்த நண்டையும் சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
அதனையடுத்து அரைத்து வைத்த பொருட்களை சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும். பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு, கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் அவ்வளவு தான் வீ்டே மணக்கும் சுவையான நண்டு ரசம் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |