நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொள்ளு ரசம்... எப்படி செய்வது?
ஜலதோஷம், இருமல், உடல்வலி சோர்வு போன்றவற்றை கட்டுப்படுத்தும் தன்மை கொள்ளுக்க காணப்படுகின்றது.
கடுமையான உடல் உழைப்பிற்க்கு பின்னர் ஏற்படும் உடல் அயர்ச்சியையும், உடல் வலியையும் போக்க பெரிதும் துணைப்புரிகின்றது.
உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும் ஆற்றல் இதில் நிறைந்துள்ளது அதேபோல் உடல் உடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு வரபிரசாதமாகும்.
மேலும் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் கொள்ளு முக்கிய பங்காற்றுகின்றது. இத்தனை மருத்துவ குணங்கள் கொண்ட கொள்ளு வைத்து அசத்தல் சுவையில் ஆரோக்கியம் நிறைந்த கொள்ளு ரசம் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கொள்ளு - 50 கிராம்
தக்காளி - 2
கொத்தமல்லி தண்டு - சிறிதளவு
புளி - சிறிய எலுமிச்சை அளவு
தண்ணீர் - 2 கப்
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
பச்சை மிளகாய் - 2
வரமிளகாய் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
பூண்டு - 10 பல்
பெருங்காயத் தூள் - சிறிதளவு
தாளிப்பதற்கு தேவையானவை
நெய் - 1 தே.கரண்டி
கடுகு - 1/2 தே.கரண்டி
ரசப்பொடி - 1 தே.கரண்டி
செய்முறை
முதலில் புளியை நீரில் ஊற வைத்து சாறு எடுத்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் கொள்ளு சேர்த்து 10 நிமிடங்கள் வரையில் நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் வறுத்த கொள்ளுவை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சற்று கொரகொரப்பான பதத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்பு அதனுடன் தக்காளி, கொத்தமல்லி தண்டு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தில் புளிச்சாற்றினை ஊற்றி, அத்துடன் மஞ்சள் தூள், அரைத்த கொள்ளு கலவை, மற்றும் தேவையான அளவு உப்பு, பச்சை மிளகாய், வரமிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, தட்டி வைத்துள்ள பூண்டு பற்கள், பெருங்காயத் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் அதனுடன் ரசப்பொடியை சேர்த்து வதக்கி, கலந்து வைத்துள்ள ரசத்தையும் சேர்த்து நன்றாக கொதிக்கவிட வேண்டும்.
ரசமானது கொதிக்க ஆரம்பிக்கும் போது கொத்தமல்லி இலையை தூவி இறக்கினால் அவ்வளவு தான் ஆரோக்கியம் நிறைந்த கொள்ளு ரசம் தயார்.
குறிப்பாக மழைக்காலங்களில் இந்த ரசத்தை உணவில் சேர்த்த்துக்கொள்வது தொற்று நோய்களில் இருந்து பெரிதும் பாதுகாப்பு கொடுக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |