காலாவதியான மாத்திரைகளை ஏன் உபயோகிக்கக்கூடாது? மீறினால் போராபத்து கூட நிகழும்!
காலாவதியான மாத்திரைகளை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்ற விழிப்புணர்வு எல்லோரிடமும் இருக்கிறது. அவற்றை ஏன் உபயோகிக்கக்கூடாது? எதற்காக தவிர்க்க வேண்டும்? காலாவதியாகும் தேதியை சரிபார்க்காமல் கவனக்குறைவுடன் மருந்து, மாத்திரைகளை உட்கொண்டால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? என்பது குறித்து பார்ப்போம்.
காலாவதியான சில மருந்து, மாத்திரைகளை உட்கொண்டால் குமட்டல், வாந்தி, மூச்சுத்திணறல், ரத்த அழுத்த பாதிப்பு, கடுமையான தலைவலி போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும். சிலரது உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
அதனால் காலாவதியாகும் தேதியை நெருங்கிக்கொண்டிருந்தாலும் அந்த மருந்து, மாத்திரைகளை தவிர்ப்பது பாதுகாப்பானது. ஒவ்வொரு மருந்திலும் அதன் செயல்திறனை மதிப்பீடு செய்வதற்காகவே காலாவதி தேதி அச்சிடப்படுகிறது. ஏனெனில் அந்த மருந்தில் சேர்க்கப்படும் வேதியியல் மூலக்கூறுகள் குறிப்பிட்ட காலத்திற்குள்தான் வினைபுரியும்.
அதன் பிறகு அதன் செயல் திறன் பலவீனமாகிவிடும். அதன்பின்பு அந்த மருந்தில் ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு அது பாதுகாப்பற்றதாக மாறும். காலாவதி தேதியை கடந்துவிட்டால் சில மருந்துகள் நிறம் மாறிவிடும். துர்நாற்றமும் வீசக்கூடும். அத்தகைய அறிகுறிகளை கொண்டே காலாவதியாகிவிட்டதை யூகித்துவிடலாம். காலாவதியாகும் மருந்துகளை உட்கொள்வது ஆபத்தானது.
தொடர்ந்து பயன்படுத்தினால் மூளை பாதிப்பு, மாரடைப்பு, அகால மரணம் உள்ளிட்ட அபாயங்களை ஏற்படுத்தும். நிறைய பேர் நோய் குணமான பிறகும் மருந்து, மாத்திரைகளை சேமித்துவைத்திருப்பார்கள். அது காலாவதியாகிபோய் இருப்பதையும் கவனிக்கமாட்டார்கள்.
அவைகளை வீட்டில் வைத்திருந்தால் குழந்தைகள் எடுத்து விளையாடலாம். எதேச்சையாக அவற்றை உட்கொள்ளலாம். அது அவர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
நாள்பட்ட வியாதிகளுக்கு மருந்து, மாத்திரைகளை உட்கொள்பவர்கள் ஒவ்வொரு மாதமும் காலாவதி தேதியை சரிபார்த்து மருந்துகளை பயன் படுத்துவது நல்லது.