சூடான சாதத்தில் ஒரு ஸ்பூன் நெய்.., கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன?
நெய் வெண்ணெயிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஒன்றாகும். நெய்யில் கொழுப்பில் கரையும் வைட்டமின்களும் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்களும் நிறைந்துள்ளன.
சூடான சாதத்துடன் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து சாப்பிடுவது இந்தியர்களின் பாரம்பரிய உணவுப் பழக்கங்களில் ஒன்றாகும்.
நெய், உணவுக்கு சுவையை அதிகரிப்பதுடன், சில ஆரோக்கிய நன்மைகளையும் தரும்.
வெள்ளை அரிசியில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், அதை சாப்பிட்ட பிறகு ரத்தத்தில் சர்க்கரை அளவு வேகமாக அதிகரிக்கும்.
சாதத்துடன் சிறிதளவு நெய் சேர்த்து சாப்பிடும்போது, செரிமானம் மெதுவாக நடைபெற உதவும்.
இதனால் குளுக்கோஸ் ரத்தத்தில் மெதுவாக கலக்க வாய்ப்புள்ளது. வகை-2 நீரிழிவு உள்ளவர்கள் நெய்யை அளவோடு உணவில் சேர்த்துக் கொள்வதால் HbA1c அளவில் சில மாற்றங்கள் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.
நெய்யில் பியூட்ரிக் அமிலம் உள்ளிட்ட சில கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை செரிமானத்துக்கும் குடல் ஆரோக்கியத்துக்கும் உதவும்.

மேலும், காய்கறிகளில் உள்ள வைட்டமின் ஏ, ஈ மற்றும் கே போன்ற கொழுப்பில் கரையும் வைட்டமின்களை உடல் உறிஞ்சுவதற்கு நெய்யில் உள்ள கொழுப்பு உதவுகிறது.
நெய் சேர்த்து சாப்பிடுவது நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வை தரும். இதனால் அடிக்கடி சிற்றுண்டி சாப்பிடும் பழக்கம் குறையும்.
இதய நோய், அதிக கொலஸ்ட்ரால் அல்லது நீரிழிவு பிரச்சனை உள்ளவர்கள் நெய்யை எவ்வளவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை மருத்துவரிடம் ஆலோசித்து முடிவு செய்வது நல்லது.