புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும் காலிஃப்ளவர் குருமா... இவ்வளவு நன்மைகள் இருக்கா?
காலிஃப்ளவரரில் ஆண்டி ஆக்ஸிடன்கள் செறிந்து காணப்படுகின்றது. இதில் வைட்டமின் சி, மாங்கனீஸ் உட்பட பல்வேறு சத்துக்களும் ,பீட்டா கரோட்டீன் போன்ற வேதிப்பொருட்களும் கொண்ட சத்தான உணவாகும்.
இதில் அல்லிசின் அதிகமாக இருப்பதால், இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், பக்கவாதம் மற்றும் பல இதய கோளாறுகளில் இருந்து பாதுகாப்பு கொடுக்கின்றது.
காலிஃப்ளவர் மன அழுத்தம், இதய நோய்களை குணமாக்கும். புற்றுநோய் செல்களையும் கட்டுப்படுத்துகிறது. காலிஃப்ளவரில் வைட்டமின் கே, மற்றும் ஒமேகா உள்ளது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதில் பெரும் பங்கு வகிக்கின்றது.
இத்தனை ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காலிஃப்ளவரை வைத்து நாவூரும் சுவையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் காலிஃப்ளவர் குருமாவை எப்படி எளிமையான முறையில் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வறுத்து அரைப்பதற்கு
முந்திரி - 12
மல்லி - 2 மேசைக்கரைண்டி
மிளகு - 1 தே.கரண்டி
சீரகம் - 1/2 தே.கரண்டி
சோம்பு - 1/2 தே.கரண்டி
ஏலக்காய் - 1
கிராம்பு - 3
பட்டை - சிறிய துண்டு
வதக்கி அரைப்பதற்கு தேவையானவை
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
சீரகம் - 1/2 தே.கரண்டி
மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
காலிஃப்ளவர் - 1
தண்ணீர் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை
முதலில் காலிஃப்ளவரை சுத்தம் செய்து துண்டுகளாக்கி, கொதிக்கும் நீரில், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடங்கள் வேக வைத்து தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் முந்திரியை போட்டு நிறம் மாறம் வகையில் லேசாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, ஏலக்காய், கிராம்பு, பட்டை ஆகியவற்றை சேர்த்து வாசனை வரும் வரையில் நன்றாக வறுத்து இறக்கி குளிர வைத்து, அதனை ஒரு மிக்சர் ஜாரில் போட்டு பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அதே பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தை சேர்த்து பொன்நிறமாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரையில் வதக்கி இறக்கி, குளிரவிட்டு ஒரு மிக்சர் ஜாரில் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் மென்மையாக அரைத்துக் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம் சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதை சேர்த்து இரண்டு நிமிங்கள் வரையில் நன்றாக வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து மிளகாய் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, பின் பொடித்து வைத்துள்ள மசாலா பொடியையும் சேர்த்து கிளறிவிட்டு, 2 நிமிடம் வரையில் மிதமான தீயில் வைத்து வேகவிட வேண்டும்.
பின்னர் அதனுடன் சுத்தம் செய்து வைத்துள்ள காலிஃப்ளவரையும் சேர்த்து, மசாலா அனைத்தும் காலிஃப்ளவரில் நன்றாக கலக்கும் வகையில் கிளறிவிட வேண்டும்.
அதன் பின்னர் குருமாவிற்கு தேவையானளவு தண்ணீர் சேர்த்து கிளறிவிட்டு, மூடி வைத்து 10 நிமிடங்கள் வரையில் நன்கு கொதிக்கவிட வேண்டும்.
குருமா ஓரளவு கெட்டியானதும், இறுதியாக கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், அவ்வளவுதான் அசத்தல் சுவையில் ஆரோக்கியத்தை அள்ளித்தரும் காலிஃப்ளவர் குருமா தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |