முடி கரு கரு என்று வளர வேண்டுமா? இதை ட்ரை பண்ணி பாருங்க
அனைத்து பெண்களுக்குமே கரு கரு என்று நீளமான முடி இருக்க வேண்டுமென ஆசை இருக்கும். ஆனால், நடப்பதெல்லாம் அதற்கு எதிர்மாறாகத்தான் இருக்கும்.
அதாவது நிறம் மாறிய கூந்தல், அடர்த்தி குறைவாக இருக்கும் கூந்தல், என்ன செய்தாலும் நீளமாக வளராத கூந்தல் இவ்வாறு கூறிக்கொண்டே செல்லலாம்.
நாம் விரும்பியவாறு முடியைப் பெற்றுக் கொள்வதற்கு இரசாயனம் கலந்த பொருட்களை நாடுவதை விடுத்து இயற்கையான பொருட்களை உபயோகித்தும் பயன் பெறலாம்.
அதற்கு சிறந்ததொரு இயற்கையான பெக்கைப் பற்றி பார்ப்போம்...
தேவையான பொருட்கள்
கோப்பித் தூள் - 1
கரண்டி தேயிலை - 1 கரண்டி
கறிவேப்பிலை - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
மருதாணி தூள் -
முட்டை - 2
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை
நாளை காலை இந்த பெக்கை தலைக்கு போடப் போகிறீர்கள் என்றால், முதல் நாள் இரவே தயார் செய்ய வேண்டும்.
ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு பெரிய செம்பு அளவில் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
அதில் ஒரு கரண்டி கோப்பித் தூள், ஒரு கரண்டி தேயிலைத் தூள், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை ஒரு கைப்பிடி சேர்த்து தண்ணீரில் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
தண்ணீர் நன்றாக கொதித்து வந்ததும் அதன் நிறம் மாறியதும் அதை அப்படியே வடிகட்டி அந்த நீரை மாத்திரம் தனியாக எடுத்து வைக்க வேண்டும்.
அடுத்ததாக ஒரு இரும்பு கடாயில் தேவையான அளவு மருதாணி தூள் சேர்த்து தனியாக வடிகட்டி எடுத்து வைத்திருக்கும் அந்த தண்ணீரை தேவையான அளவு மருதாணித் தூளுடன் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதை மூடி வைத்து மறுநாள் காலையில் பார்க்கும்பொழுது இரும்புக் கடாயில் வைத்திருக்கும் மருதாணித் தூள் கருப்பு நிறத்துக்கு மாறியிருக்கும்.
அதனுடன் இரண்டு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும். (முட்டை சேர்த்துக்கொள்ள விரும்பாதவர்கள் அதை தவிர்த்துக் கொள்ளலாம்)
பயன்படுத்தும் முறை
பெக் தயாரானதும் முதல் நாள் இரவே தலையில் நன்றாக தேங்காய் எண்ணெய் தடவி மசாஜ் செய்து கொள்ள வேண்டும்.
தலையில் எண்ணெய் இருந்தால்தான் பெக் நன்றாக தலையில் ஒட்டி அதன் முழுமையான பலனைக் கொடுக்கும்.
தலையில் எல்லா இடத்திலும் படும்படியாக தேய்க்க வேண்டும்.
பின்னர் தலையை ஒரு மணி நேரம் பொலித்தீன் பையினால் கட்டிக் கொள்ளவும்.
பின்பு ஷெம்பூ கொண்டு நன்றாக தலையைக் கழுவிக் கொள்ளவும்.
இதை மாதத்துக்கு ஒருமுறை மாத்திரம் உபயோகித்தாலே போதுமானது.
குறிப்பு : இந்த பெக்கை நாளை உபயோகிக்கப் போகிறீர்கள் என்றால், ஒரு நாளைக்கு முன்பே தயார் செய்து வைத்துவிட வேண்டும்.
இளநரை, வயோதிபர்களின் முடி நரைத்திருத்தல் போன்றவற்றையும் இது மாற்றக்கூடியது. அதேசமயம் முடி திக்கானதாகவும் அடர்த்தியானதாகவும் மாறும்.
முடிக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் இதில் கிடைக்கும்.
முடி ஊட்டச்சத்து குறைபாடின்றி வளர வேண்டுமாயின் பயோட்டின் சத்து நிறைந்த உணவுகளான, பாதாம், பூசணி விதை, கீரை வகைகள், வேர்க்கடலை, நட்ஸ் போன்றவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.