ஜனநாயகன் லீக் குறித்து முதல்வர் விஜய் ஏன் பேசவில்லை?- இயக்குநர் ஹெச்.வினோத் விளக்கம்
விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் வரும் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் பேசியதாவது..,
ஜனநாயகன் படத்துக்கு நிறைய தடைகளும், பிரச்சினைகளும் இருந்தன. இறுதியாக படம் வெளியாகிறது. இந்தப் படத்துக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும். படத்துக்கு அநீதி நடந்ததா என்பது மக்களுக்குத் தெரியும் என்றார்.
மேலும், முதலில் படத்துக்கு UA சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், தற்போது A சான்றிதழ் வழங்கப்பட்டது தனக்கும் தயாரிப்பாளருக்கும் வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார்.
இதை எதிர்த்து போராட போதிய நேரம் இல்லாததால், தற்போது படத்தை வெளியிடுவதிலேயே கவனம் செலுத்தி வருவதாக கூறினார்.

விஜய் தன்னை இயக்குநராக தேர்வு செய்ததற்கான காரணம் குறித்து பேசிய ஹெச்.வினோத், பெண்கள் முன்னேற வேண்டும் என்ற விருப்பம் விஜய்க்கு இருந்தது. அதனால் இந்தக் கதை அவருக்கு பிடித்திருந்தது. படத்தில் அவருக்கு பிடித்த பல விஷயங்கள் இருந்தன என்றார்.
சென்சார் விவகாரத்தில் பல விஷயங்கள் நடந்துள்ளதாகவும், ஆனால் அதற்கான ஆதாரங்கள் இல்லாததால் வெளிப்படையாக பேச முடியவில்லை என்றும் ஹெச்.வினோத் தெரிவித்தார்.
அரசியல் லாபத்துக்காக தங்கள் மீது பழி சுமத்தப்பட்டதாகவும், பிரச்சனைகள் ஏற்பட்டபோது தயாரிப்பாளரும் விஜய்யும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்ததாகவும் அவர் கூறினார்.
ஜனநாயகன் படத்தின் லீக் குறித்து விஜய் ஏன் பேசவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இது ஒரு சட்டப்பிரச்சினை, அதற்கான முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, அதனால் விஜய் இது குறித்து பேசவில்லை என்று பதிலளித்தார்.