நீரிழிவுக்கு அரும்மருந்தாகும் சுண்டைக்காய் குழம்பு... இப்படி செய்து பாருங்க
கசப்பாக இருந்தாலும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறி வகைகளில் ஒன்றாக சுண்டைக்காய் முக்கிய இடம் வகிக்கின்றது.
ஆஸ்துமா, வறட்டு இருமல், மார்புசளி, காசநோய் ஆகியவற்றுக்கு தீர்வு கொடுக்கின்றது. இது வயிற்றில் உள்ள பூச்சிகளை நீக்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றது.
மூலத்தில் ஏற்படும் கடுப்பு, மூலச்சூடு மற்றும் வயிற்று கோளாறுகளுக்கும் சிறந்த மருந்தாக திகழ்கின்றது.
மேலும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் அதிக ஆற்றல் காட்டுகின்றது. இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்த சுண்டைக்காயை வைத்து அசத்தல் சுவையில் எப்படி குழம்பு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பச்சை சுண்டக்காய் - 100 கிராம்
தேங்காய் - 1/4 கப்
சோம்பு - 1 தே. கரண்டி
எண்ணெய் - 1 தே. கரண்டி
கடுகு - 1 தே. கரண்டி
சீரகம் - 1/2 தே. கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 10 பல்
குழம்பு மிளகாய் தூள் - 2 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
மல்லித் தூள் - 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - சுவைக்கேற்ப
புளி - சிறிய எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்)
பெருங்காயத் தூள் - 1/2 தே.கரண்டி
செய்முறை
முதலில் சுண்டக்காயை சுத்தம் செய்து தட்டி, அதை தண்ணீரில் இரண்டு முறை பிசைந்து கழுவி 2 தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து புளியையும் நீரில் ஊற வைத்து சாறு எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு மிக்சர் ஜாரில் தேங்காய் மற்றும் சோம்பு ஆகியவற்றை போட்டு தேவையானளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், சுண்டக்காயை போட்டு நான்கு தொடக்கம் 5 நிமிடங்கள் வரையில் நன்றாக வதக்கி தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதே பாத்திரத்தில் உள்ள எண்ணெயில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளித்து கொள்ள வேண்டும்.
பின்பு பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்நிறமாக மாறும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து குழம்பு மிளகாய் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, அதன் பின்னர் தக்காளியையும் போட்டு நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, புளி நீரை ஊற்றி பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
நன்றாக கொதித்ததும் சுண்டக்காய் மற்றும் அரைத்த தேங்காயை சேர்த்து கிளறிவிட்டு தேவையானளவு உபபு சேர்த்து, எண்ணெய் பிரியும் வரையில் கொதிக்கவிட்டு இறக்கினால் அட்டகாசமான சுவையில் பச்சை சுண்டக்காய் குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |