பெற்றோரின் வற்புறுத்தல்! 4 மாத குழந்தையை கொலை செய்த தந்தை: அதிர்ச்சி சம்பவம்
தனது பெற்றோர்கள் நெருக்கடி கொடுத்ததால் தனது 4 மாத குழந்தையினை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதல் திருமணம்
செங்கல்பட்டு மாவட்டம் ஊரபாக்கம் பெரியார் தெருவைச் சேர்ந்தவர் வருண் (20). இவர் சென்னை மீனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி(20) என்ற பெண்ணை காதலித்து வந்ததுடன், திருமணத்திற்கு முன்பு விஜயலட்சுமி கர்ப்பமடைந்தும் உள்ளார்.
பின்பு வீட்டிற்கு தெரியாமல் விஜயலட்சுமியை திருமணம் செய்த வருண், மாடப்பாக்கம் பகுதியில் தனது பெற்றோருக்கு தெரியாமல் வீடு எடுத்து விஜயலட்சுமியை தங்க வைத்துள்ளார்.
இந்நிலையில் விஜயலட்சுமிக்கு ஆண் குழந்தை பிறந்து 4 மாதங்கள் ஆகிய நிலையில், வருண் பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வற்புறுத்தியுள்ளார்.
குழந்தையை கொன்ற தந்தை
மனைவியின் வற்புறுத்தால் பெற்றோரிடம் சென்று தனக்கு திருமணம் ஆனதையும், ஆண் குழந்தையும் இருப்பதை கூறியுள்ளார். இதனை எதிர்த்த பெற்றோர் குழந்தையையும், தாய் விஜயலட்சுமியை வேறு இடத்தில் கொண்டு சென்றுவிட்டுவிட கூறியுள்ளனர்.
இதனால் வருண் தனது நண்பருக்கு குழந்தை இல்லாததால் அவர்களிடம் குழந்தையை கொடுத்துவிடலாம் என்றும் இடை இடையே சென்று நாம் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறி குழந்தையை பெற்றுச் சென்றுள்ளார்.
இரண்டு மாதங்கள் ஆகியும் குழந்தையை கண்ணில் காட்டாத வருண் மீது சந்தேகம் ஏற்பட்ட நிலையில், விஜயலட்சுமி காவல்நிலையத்தில் புகார் அளித்ததின் பெயரில், வருணிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
குழந்தையை விஜயலட்சுமியிடம் இருந்து வாங்கி சுடுகாட்டுக்கு கொண்டு சென்று அங்கு கழுத்தை நெரித்து கொலை செய்து புதைத்துவிட்டதாக வருண் கூறியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துடன், வருணை சிறையில் அடைத்துள்ளனர்.