தெருவே மணக்கும் பூண்டு குழம்பு! நாவூறும் சுவையில் செய்வது எப்படி?
சமையலறையில் முக்கியமாக பொருளாக வலம்வரும் பூண்டு பல நன்மைகளை அளிக்கின்றது. பூண்டை வறுத்து, சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறையும்.
இவ்வாறு பல வழிகளில் நன்மையை அளிக்கும் பூண்டு குழம்பு வைத்து சாப்பிடுவது தனி ருசி. இரண்டு மூன்று நாட்கள் வரை இன்றும் கிராம மக்கள் சுண்ட வைத்து சாப்பிடுவதை நாம் பார்க்க முடிகின்றது.
அவ்வாறான பூண்டு குழம்பு தெருவே மணக்கும் வகையில் எவ்வாறு வைப்பது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தேவையானவை
பூண்டு (உரித்தது) - 25 பல்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 50 கிராம்
தக்காளி - 2 (பெரியது)
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு (ஊற வைத்துக்கொள்ளவும்)
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
மல்லி மற்றும் மிளகாய் தூள் - தேவைக்கு ஏற்ப
கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம் - சிறிதளவு
உப்பு - தேவைக்கு ஏற்ப
நல்லெண்ணெய் - 50 கிராம்
செய்முறை
வாணலி அல்லது மண்சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்து, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
பின்பு நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு பற்களை சேர்த்து மிருதுவாகும் வரை வதக்கவும்.
அத்துடன் அரைத்த தக்காளியை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
இதனுடன் புளிக்கரைசல், உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றைப் போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
குழம்பு பதம் வந்ததும் கொத்தமல்லித்தழையை சேர்த்து இறக்கி பரிமாறவும்.