வீடே மணமணக்கும் வாசத்துடன் மிளகு குழம்பு செய்வது எப்படி? ரெசிபி இதோ
பொதுவாக இந்தியா போன்ற நாடுகளில் மிளகு குழம்பு பாரம்பரிய உணவுகளில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
இதில், சின்ன வெங்காயம், பூண்டு, புளி சேர்த்து செய்தால் சுவை இன்னும் அள்ளும்.
குளிர் காலத்தில் ஜலதோஷம், இருமல், சளி தொல்லை ஏற்பட்டால் மருந்து எடுத்துக்கொள்வதற்கு பதிலாக வீட்டிலேயே எளிதாக மிளகு குழம்பு செய்து சாப்பிடுவது வழக்கம்.
மிளகு குழம்பை சாதத்துடன் ஒரு டீ ஸ்பூன் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிடலாம். குளிர்கால நாட்களில் மிளகு குழம்பு செய்தால் குளிர்சாதன பெட்டியில் வைத்து 2 வாரங்களுக்கு மேல் சாப்பிடலாம்.
அந்த வகையில், ஈஸியான முறையில் சுவை அள்ளும் வகையில் மிளகு குழம்பு செய்வது எப்படி என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
- சின்ன வெங்காயம் – 50 கிராம்
- பூண்டு – 15 பல்
- புளி – 1 நெல்லிக்காய் அளவு
- நல்லெண்ணெய் – 6 டேபிள் ஸ்பூன்
- உப்பு – தேவைக்கேற்ப
வறுத்து அரைப்பதற்கு தேவையான பொருட்கள் :
- கொத்தமல்லி விதை - 3 டேபிள் ஸ்பூன்
- மிளகு – 2 டேபிள் ஸ்பூன்
- கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
- பச்சரிசி – 1 டீஸ்பூன்
தாளிக்க தேவையான பொருட்கள் :
- கடுகு – 1 டீ ஸ்பூன்
- சீரகம் – 1 டீ ஸ்பூன்
- வெந்தயம் – 1/4 டீ ஸ்பூன்
- கருவேப்பிலை – சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் நல்லெண்ணெய் விட்டு அதில், கொத்தமல்லி விதை, மிளகு, கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு, பச்சரிசி ஆகியவற்றை போட்டு பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
கலவை ஆறியதும், மிக்ஸியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைக்கவும். நெல்லிக்காய் அளவு புளியை எடுத்து கரைச்சல் போன்று தயாரித்து தனியாக வைத்து கொள்ளவும்.
அதே கடாயில், நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலாக்கலவையை சேர்க்கவும்.
கிளறிக் கொண்டே புளிக்கரைசலை போட்டு கலந்து விடவும். அதனுடன் உப்பு சேர்த்து சரியாக 20 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.
இறுதியாக வாணலியில் தாளிக்க கொடுக்கபட்டிருக்கும் பொருட்களை போட்டு தாளித்து குழம்பில் ஊற்றி இறக்கவும். குழம்பு தண்ணீர் பதத்திற்கு இருந்தால் கெட்டியாகும் வரையில் மிதமான சூட்டில் வைக்கவும். இது சுவையுடன் கூடிய கெட்டித்தன்மையை கொடுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |