சுவையான சத்தான முட்டைகோஸ் சாதம்
குழந்தைகள் அவ்வளவாக விரும்பி சாப்பிடாத முட்டைக்கோஸை வைத்து சாதம் எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த முட்டைக்கோஸ் சாதம் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது .தை சமைத்து கொடுத்தால் அவர்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கும் வழி வகுக்கும்.
தேவையான பொருட்கள்
- வடித்த சாதம் - 2 கப்
- முட்டைக்கோஸ் - 150 கிராம்
- பெரிய வெங்காயம் - 1
- கேரட் - 1
- பச்சை மிளகாய் - 2
- மஞ்சள் தூள் - ஒரு பின்ச்
- எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - 1/4 டீஸ்பூன்
- கொத்தமல்லி இலை - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
- கடுகு - 1/4 டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1 1/2 டீஸ்பூன்
- வரமிளகாய் - 1
- கடலை பருப்பு - 1 1/2 டீஸ்பூன்
- வேர்க்கடலை - 3 டீஸ்பூன்
- முந்திரி - 5 - 6
செய்யும் முறை
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்ற வேண்டும். அது சூடாகியதும் கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு போட்டு கிளர வேண்டும்.
கடுகு நன்றாக வெடித்து வரும் சந்தர்ப்பத்தில் வேர்க்கடலை, கடலை பருப்பு, முந்திரி மற்றும் வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும்.
பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் பொடியாக நறுக்கிய கேரட் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி கொள்வும்.
பின்னர் இதில் நறுக்கிய முட்டைக்கோஸ் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 2 முதல் 3 நிமிடங்கள் வதக்கிக்கொள்ளுங்கள். இதனுடன் வடித்த சாதம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து குறைந்த தீயில் நன்கு கலந்துவிட்டுக்கொள்ளுங்கள்.
இறுதியாக கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கினால் சுவையான ஆரோக்கியமான முட்டைகோஸ் சாதம் தயார்.