கத்தரிக்காய் தொக்கு இப்படி செய்து சாப்பிடுங்க! வாழ்நாளில் இதன் சுவை மறக்காது
பலரும் வெறுத்து ஒதுக்கும் கத்தரிக்காயில் எண்ணற்ற பல நன்மைகள் அடங்கியுள்ளன, இதில் மாங்கனீசு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
நீர்ச்சத்து அதிகம் கொண்ட கத்தரிக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, பி1, மற்றும் பி2, காணப்படுகின்றன. இதில் இருக்கும் நார்ச்சத்து பசியை கட்டுப்படுத்துவதால், உடல் எடையை குறைக்க உதவுகிறது.
கத்தரிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதயநோய், ரத்த நாளங்களில் ஏற்படும் நோய்கள் மற்றும் மாரடைப்பு தடுக்கப்படும், இதில் உள்ள சத்துக்கள் திசுக்களின் அழிவை தடுக்கிறது. இதனை கொண்டு சுவையான மசாலா தொக்கு செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
விதையில்லாத சிறிய கத்திரிக்காய் - 15
பழுத்த தக்காளி - 2
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 5
கிராம்பு, ஏலக்காய் - தலா 2
பட்டை - 2 துண்டு
சோம்பு - ஒரு தேக்கரண்டி
கசகசா - ஒன்றரை தேக்கரண்டி
முந்திரிப் பருப்பு - 10
வேர்க்கடலை,
எள் - தலா ஒரு தேக்கரண்டி
கொப்பரைத் தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி
கெட்டியான தேங்காய் பால் - ஒன்றரை கப்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை
கத்தரிக்காயின் காம்பை எடுக்காமல் நீளவாக்கில் வெட்டிக்கொண்டு, கடாயில் எண்ணெய் விட்டு வதக்கி வைக்கவும்.
அரைக்க கொடுத்துள்ள கிராம்பு, ஏலக்காய், பட்டை, சோம்பு, கசகசா, முந்திரிப்பருப்பு, வேர்க்கடலை, எள், கொப்பரைத்தேங்காய் துருவலை ஒன்றன் பின் ஒன்றாக வெறும் கடாயில் போட்டு வறுத்து அரைத்துக் கொள்ளவும்.
இதனுடன் தக்காளி சாறு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கிய பின்னர், கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்.
இதில் கெட்டியான தேங்காய் பால் சேர்த்து வேக விட்ட பின்னர், உப்பு சேர்த்து, கரைத்து வைத்துள்ள தக்காளி மசாலா கலவையை ஊற்றி நன்றாகக் கொதித்து, வைத்து குழம்பு பதம் வந்ததும் இறக்கினால் சுவையான குழம்பு தயார்.