மயக்கத்தில் இருந்த தனது 4 குழந்தைகளை கிணற்றுக்குள் வீசிய தந்தை: பின்னணியில் பகீர் காரணம்
மனைவி உயிரிழந்த நிலையில் அவரின் தங்கையை திருமணம் செய்துவைக்க மாமியார் மறுப்பு தெரிவித்ததால் தனது நான்கு குழந்தைகளையும் கிணற்றில் வீசி தந்தை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் போஷலா கிராமத்தைச் சார்ந்தவர் புர்காராம் இவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதியருக்கு ஜியோ(9) வயது நெசிலா (7) ஹீனா(3) மற்றும் லாசி(1) ஆகிய நான்கு மகள்கள் இருந்தனர்;
இந்நிலையில் அவரது வாழ்க்கை மிக மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென அவரது மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அவர் உயிரிழந்தார்.
மனைவியை பறிகொடுத்த புர்காராம் ஒருபுறம் கடுமையான மன உளைச்சலில் அவதிப்படவே, மறுபுறம் குழந்தைகள் தாய் இல்லாமல் ஏக்கத்தில் பரிதவித்து வந்துள்ளனர்.
இதனால் குழந்தைகளுக்கு தாய் தேவை என்று நினைத்த புர்காராம் மனைவியின் தங்கையை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். இதற்கு மாமியார் மறுத்துள்ளார்.
இதனால் மனமுடைந்த குறித்த நபர் தனது நான்கு குழந்தைகளுக்கும் விஷம் கலந்த சாப்பாட்டை கொடுத்துவிட்டு மயங்கிய பின்பு அருகில் இருந்த கிணற்றில் தூக்கி வீசியுள்ளார்.
இறுதியாக புர்காராமும் கிணற்றில் குதிக்க முயன்ற தருணத்தில் , அவரை சிலர் அவதானித்து தடுத்து நிறுத்தியதோடு, பொலிசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
ஆனால் 4 குழந்தைகளும் உயிரிழந்துள்ளது. குழந்தைகளின் உடலைக் கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். விஷம் கலந்த உணவினை உண்ட புர்காராம் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.