தந்தைக்கு பெரியம்மாவை திருமணம் செய்து வைத்த மகள்கள்! நெகிழ்ச்சி சம்பவம்
இந்தியாவில் தன்னுடைய தாய் இறந்து மூன்று மாதத்தில் தனிமையில் வாடிய தந்தைக்கு, தாயின் சகோதரியை மகள்கள் திருமணம் செய்து வைத்த சம்பவம் நடந்துள்ளது.
தனிமையில் தவித்த தந்தை
கர்நாடகாவின் ஹூப்ளி பகுதியை சேர்ந்தவர் டி.கே.சவான், 2018ம் ஆண்டில் ஹூப்ளி நகரின் மேயராக பதவி வகித்தவர்.
இவரது மனைவி சாரதா பாய், இவர்களுக்கு 4 மகள்கள் இருக்கின்றனர், அனைவருக்கும் திருமணம் நடந்து முடிந்துவிட்டது.
மனைவி, மகள்கள், பேரப்பிள்ளைகள் என சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளனர் சவானின் குடும்பத்தினர்.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் சவானின் மனைவி சாரதா பாய் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.
மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் சவான் தவித்து வந்துள்ளார்.

தந்தைக்கு மறுமணம்
எனவே தந்தைக்கு மறுமணம் செய்து வைக்க சவானின் மகள்கள் முடிவு செய்தனர், இதை கூறியபோது சவான் ஏற்றுக்கொள்ளவில்லை.
எனினும் தந்தையிடம் சம்மதம் வாங்கி மணப்பெண்ணை தேடியுள்ளனர், தங்களுக்கு தெரிந்தவராக இருந்தால் நல்லது என எண்ணியபோது, சாரதா பாயின் அக்கா நினைவு வந்துள்ளது.
திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்த சாரதா பாயின் அக்காவையும் சம்மதிக்க வைத்தனர், இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு 16 மற்றும் 17ம் திகதிகளில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
இதில் இவர்களது குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

