செஃப் வெங்கடேஷ் பட் ரெசிபி : பஞ்சாபின் புகழ்பெற்ற ராஜ்மா சாவல்!
Chef Venkatesh Bhat’s Delicious Punjabi Rajma Chawal recipe : பொதுவாகவே விதவிதமாக சமைத்து சாப்பிடுவது என்றால் யாருக்கு தான் பிடிக்காது? சமையலை மனிதர்களுக்கு மட்டுமே கிடைத்த வரம் என்றால் மிகையாகாது.
அந்தவகையில், பஞ்சாப் மாநிலத்தின் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்றான ராஜ்மா சாவல் எவ்வாறு செய்யலாம் என்று தான் இந்த பதிவில் பார்க்கப்போகின்றோம்.
நறுமணமிக்க மசாலாக்கள் சேர்த்து நன்கு வேகவைத்த ராஜ்மா கிரேவியுடன், சூடான சாதத்தைச் சேர்த்துச் சாப்பிட்டால் அதன் சுவையே தனிதான்!

எளிய பொருட்களைக் கொண்டு தயாரிக்கக்கூடிய இந்த உணவு, வயிறு நிறையவும் மனம் மகிழவும் சாப்பிட ஏற்றது.அதனால்தான் வட இந்திய வீடுகளில் இந்த உணவு முக்கிய இடம் வகிக்கின்றது.
ராஜ்மா என்றால் சிவப்பு நிற கிட்னி பீன்ஸ் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், 'சாவல்' என்றால் இந்தியில் சாதம் என்று பொருள். ராஜ்மா கிரேவியுடன் சாதத்தையும் சேர்த்துப் பரிமாறுவதால் இந்த உணவுக்கு 'ராஜ்மா சாவல்' என்று பெயர் வந்தது.

இந்த சுவையான பஞ்சாபி உணவை, செஃப் வெங்கடேஷ் பட் அவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் 'சமையல் சமையல்' நிகழ்ச்சியில் செய்து காட்டியிருந்தார். அவரது செய்முறையை பின்பற்றி ராஜ்மா சாவலை அசத்தல் சுவையில் நீங்களும் எவ்வாறு எளிதாக செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ராஜ்மா (சிவப்பு காராமணி) – ½ கப்
வெங்காயம் – 1
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 2
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – ½ தேக்கரண்டி
மஞ்சள்தூள் – ¼ தேக்கரண்டி
மல்லித்தூள் – ½ தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தாளிக்கத் தேவையானவை
எண்ணெய் – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
பரிமாறுவதற்கு - சாதம் – 1 கப்

செய்முறை
ராஜ்மாவை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைக்கவும். மறுநாள் ஊற வைத்த ராஜ்மாவை சிறிதளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 முதல் 4 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம் சேர்த்துத் தாளித்து கொள்ள வேண்டும்.
பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து 4 முதல் 5 நிமிடங்கள் வதக்கி, அதனுடன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கி கண்ணாடி பதத்திற்கு வந்ததும் நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும். தக்காளி நன்கு குழைந்து வரும் வரை வதக்கவும். பின்னர் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் மற்றும் மல்லித்தூள் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
இப்போது வேக வைத்த ராஜ்மாவைச் சேர்த்து மசாலாவுடன் நன்றாகக் கலக்கவும். குழம்புக்குத் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாகக் கொதிக்க விட வேண்டும்.
குழம்பு கெட்டியாகத் தொடங்கியதும் கரம் மசாலாத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். மேலும் 2 முதல் 3 நிமிடங்கள் கொதிக்க வைத்து அடுப்பை அணைத்தால் அவ்வளவு தான் நாவூரும் சுவையில், ராஜ்மா சாவல் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |