நகரும் நடைபாதையில் சிக்கி காலை இழந்த இளம்பெண்!
தாய்லாந்தில் விமான நிலையத்தில் நகரும் நடைபாதையில் சென்ற இளம்பெண்ணின் கால் துண்டான சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சுற்றுலா செல்வதற்கு மிகச்சிறந்த இடங்களில் ஒன்றான இடம் தாய்லாந்து. பல சுற்றுலா பயணிகள் தாய்லாந்திற்கு வருவர்.
அப்படிப்பட்ட தாய்லாந்து விமான நிலையத்தில் நகரும் நடைபாதையில் சென்ற போது இளம்பெண்ணின் கால் துண்டானது தற்போது பேசு பொருளாகி உள்ளது.
கால் சிக்கியது எப்படி?
பாங்காக்கில் உள்ள டான் முயாங் சர்வதேச விமான நிலையத்தில் இளம்பெண் ஒருவர் வந்துள்ளார். அவர், அங்குள்ள ட்ராலேட்டர் எனப்படும் நகரும் நடைபாதையில் தனது சூட்கேஸுடன் சென்றார்.
Viral Press
அப்போது அவர், நிலை தடுமாறி சூட்கேஸின் மீது விழுந்ததில், அவருடைய கால் நகரும் நடைபாதையில் இழுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இளம்பெண்ணிற்கு சிகிச்சை
நகரும் நடைபாதையில் கால் சிக்கிய நிலையில் இளம்பெண் கதறி துடித்துள்ளார். அப்போது, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விமான நிலைய மருத்துவ ஊழியர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
Viral Press
பின்பு அவர், மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அறுவைசிகிச்சை செய்த போது பாதி கால் அகற்றப்பட்டது. தற்சமயம் அந்த பெண் நலமுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ செலவை ஏற்ற விமான நிலையம்
இந்த விவகாரம் தொடர்பாக டான் முயாங் சர்வதேச விமான நிலைய இயக்குநர் கருண் தனகுல்ஜீரபட் கூறுகையில்,"நடைபாதையின் பெல்டின் கீழ் சூட்கேஸின் சக்கரங்களும் இருந்தன. அதை நாங்கள் எடுத்து வைத்துள்ளோம்.
Viral Press
நடைபாதையை தினசரி ஆய்வு செய்தும், விபத்துக்கான கூடுதல் தகவல்களை ஆய்வு செய்தும் வருகிறோம். மேலும், அந்த பயணிக்கு தேவையான மருத்துவச் செலவு மற்றும் இழப்பீட்டுத் தொகையை விமான நிலைய நிர்வாகம் ஏற்றுக் கொள்ளும்" என்று கூறினார்.