காரம் கொஞ்சம் தூக்கலாக இறால் தொக்கு செய்வது எப்படி?
பொதுவாக வீடுகளில் ஞாயிற்றுகிழமை வந்து விட்டால் அசைவ உணவுகளுக்கு பஞ்சம் இருக்காது.
அப்படி சமைக்கும் பொழுது வாரம் வாரம் ஒரே மாதிரியான உணவுகளை சமைக்காமல் கொஞ்சம் வித்தியாசமான ரெசிபிகளை செய்து சாப்பிடலாம். விடுமுறை நாட்களில் உங்கள் சமையலை சிம்பிளாக முடிக்கலாம்.
பலருக்கும் பிடித்த இறால் வாங்கினால் காரம் கொஞ்சம் தூக்கலாக போட்டு, தொக்கு செய்யலாம். இந்த ரெசிபி வீட்டிலுள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்.
ஈஸியான இறால் தொக்கு ரெசிபி தெரிந்தால் இரவு வேளை சாப்பாட்டிற்கு கூட சமைக்கலாம்.
அந்த வகையில், இறால் தொக்கு எப்படி இலகுவாக செய்யலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.
ஊற வைப்பதற்கு தேவையான பொருட்கள்:
* இறால் - 1/2 கிலோ
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
தொக்குவிற்கு தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 1/2 டேபிள் ஸ்பூன்
* கிராம்பு - 4
* பட்டை - 2 துண்டு
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய பூண்டு - 2
* சின்ன வெங்காயம் - 150 கிராம்
* பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* குழம்பு மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1/2 டம்ளர்
* கொத்தமல்லி - சிறிது
இறால் தொக்கு செய்முறை
முதலில் இறாலை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். அதன் பின்னர் ஒரு கிண்ணத்தில் கழுவிய இறாலை தனியாக எடுத்து வைத்து, அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் இஞ்சி பூண்டு சேர்த்து போட்டு பிரட்டி தனியாக வைக்கவும்.
45 நிமிடங்கள் வரை ஊற வைத்து விட்டு பூண்டு, வெங்காயம் இரண்டையும் வெட்டி தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும். அதன் பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கிராம்பு, பட்டை, சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
அதில் தட்டி வைத்துள்ள பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை போட்டு வதங்க விடவும். அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளியை போட்டு வதங்கியவுடன் குழம்பு மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதங்க விடவும்.
அடுத்து, ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து 5 நிமிடம் வரை கிளறி விட்டு, லேசாக நீர் விட்டு வரும் வரை தீயில் வைத்து விட்டு, அதனுடன் 1/2 டம்ளர் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 10 நிமிடம் இறாலை வேக விடவும். இறால் நன்கு வெந்ததும், அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறி எடுத்தால் சுவையான இறால் தொக்கு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |