கூகுளிடம் இருந்து யூடியூப்பிற்கு அனுப்பட்ட இமெயில்.. இனி இதற்கும் வருவாய் ஈட்டவேண்டுமாம்! அதிர்ச்சியில் யூடியூப்பர்ஸ்
யூடியூப் ஆன்லைன் சேனல்களானது அசுர வளர்ச்சியை எட்டியுள்ளது. மேலும் யூடியூப்பின் வருமானமும் அதிகரித்த வேலையில் அமெரிக்காவை தவிர இந்தியா மற்றும் உலகின் பிற பகுதிகளிலும் உள்ள யூடியூப் மூலம் மாதம் கணிசமான வருவாய் ஈட்டி வரும் கன்டன்ட் கிரியேட்டர்களுக்கு மோசமான செய்தி ஒன்றை கூகுள் தற்போது வெளியிட்டுள்ளது.
அதில், யூடியூப் வீடியோக்கள் பதிவிடுவதன் மூலம் வருமானம் பெறும் அனைத்து யூடியூபர்களுக்கும் கூகுள் மெயில் ஒன்று அனுப்பியுள்ளதாக தெரிகிறது. கூகுள் அனுப்பியுள்ள அந்த மெயில் அமெரிக்க நாட்டை தவிர பிற நாடுகளில் உள்ள யூடியூப் கன்டன்ட் கிரியேட்டர்களுக்கு சிறந்த செய்தியாக இல்லை.
ஏனெனில் கூகுள் அனுப்பியுள்ள மெயிலில் கன்டன்ட் கிரியேட்டர்களின் வருமானத்தை குறைக்கும் வகையில் ஒரு புதிய விதி பற்றி கூறப்பட்டுள்ளது. மேலும், யூடியூபர்களுக்கு கூகுள் அனுப்பியுள்ள மெயிலில், அமெரிக்காவில் உள்ள பார்வையாளர்களிடமிருந்து பெறும் வருவாயின் அடிப்படையில், அமெரிக்காவிற்கு வெளியே உள்ள அனைத்து யூடியூபர்களிடமிருந்தும் குறிப்பிட்ட சதவீத அளவு வரிகளை விரைவில் கழிக்க போவதாக குறிப்பிட்டுள்ளது.
இதனால், அமெரிக்காவை தவிர பிற நாடுகளில் உள்ள யூடியூபர்களுக்கான தங்களது இந்த புதிய கொள்கை வரும் ஜூன் 2021 முதல் வர வாய்ப்புள்ளதாக யூடியூப் படைப்பாளர்களுக்கு அனுப்பியுள்ள மெயிலில் கூகுள் தெரிவித்துள்ளது.
மேலும் யூடியூபர்கள் பெரும் வருவாயிலிருந்து கழிக்க வேண்டிய சரியான வரிகளை தீர்மானிக்க , கூகுள் ஆட்ஸென்ஸில்(Google AdSense) தங்கள் வரி தகவல்களை சமர்ப்பிக்கும்படி படைப்பாளர்களையும் யூடியூப் கேட்டு கொண்டுள்ளது. இந்த நிலையில்ம, யூடியூப் அதன் சப்போர்ட் பக்கத்தில், அமெரிக்க உள்நாட்டு வருவாய் குறியீட்டின் 3-வது அத்தியாயத்தின் கீழ், ஒரு கிரியேட்டர் அமெரிக்க நாட்டில் வசிக்கும் பார்வையாளர்களிடமிருந்து ராயல்டி வருவாயை பெறும் போது, அந்த கிரியேட்டரின் வரித் தகவல்களைச் சேகரிப்பது, குறிப்பிட்ட அளவு வரி பிடிப்பது மற்றும் உள்நாட்டு வருவாய் சேவைகளுக்கு (ஐஆர்எஸ்) இது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிப்பது கூகுளின் பொறுப்பாகும்.
எனவே கிரியேட்டர்கள் தங்களது ஆட்ஸென்ஸ் கணக்கில் தங்கள் தகவல்களை கூடிய விரைவில் புதுப்பிக்க யூடியூப் கேட்டுக் கொண்டுள்ளது. ஒருவேளை யூடியூபர்கள் வரும் மே மாதம் 31-ம் தேதிக்குள் ஆட்ஸென்ஸ் கணக்கில் எதிர்பார்க்கும் தகவல்களை சமர்ப்பிக்கா விட்டால், யூடியூபர்கள் தங்கள் சேனலில் பதிவிடும் வீடியோக்களுக்கு உலகளவில் அவர்களின் பெறும் மொத்த வருவாயில் 24% கழிவை சந்திக்க நேரிடும் என்றும் யூடியூப் குறிப்பிட்டுள்ளது.
இதனால், தங்களது இந்த புதிய விதியை உலக நாடுகளில் உள்ள யூடியூபர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையிலும், அவர்கள் தங்களது வரி தகவல்களை சமர்ப்பிக்க உதவும் வகையிலும் வீடியோ ஒன்றை உருவாக்கி தனது சமூக ஊடக பக்கங்களில் ஷேர் செய்துள்ளது யூடியூப். யூடியூபர்களின் வீடியோக்களுக்கு அமெரிக்க பார்வையாளர்களிடமிருந்து அவர்கள் ஈட்டும் வருவாயில் அதிகபட்சம் 30 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை அமெரிக்க பார்வையாளர்களிடமிருந்து கிரியேட்டர் பெறும் மொத்த வருவாயில் சுமார் 15 சதவீதம் வரி பிடித்தம் செய்யப்படும் என்று தெரிகிறது.