சூப்பரான சுவையில் கம கமக்கும் முட்டை கொத்து இட்லி சாப்பிட்டு இருக்கீங்களா?
பொதுவாக வீட்டில் இட்லி மிச்சமாகி விட்டாலே சூர்யவம்சம் தேவயாணி போல உப்புமா செய்வது தான் வழக்கம்.
ஆனால் இனி முட்டை கொத்து இட்லி செய்து பாருங்க, புது டிஷ் செய்த அனுபவம் கிடைக்கும். அந்தவகையில் முட்டை கொத்து இட்லி எவ்வாறு செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
இட்லி - 6
முட்டை - 3
வெங்காயம் - 2
தக்காளி - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
தனியா தூள் - 1/2 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மிளகுப் பொடி - 1/2 ஸ்பூன்
சோம்பு - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை-1 கொத்து
கொத்தமல்லி - கையளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் இட்லியை உதிர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் மல்லிதழை ஆகியவற்றை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு அகன்ற பாத்திரத்தை வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும்.
எண்ணெய் சூடான பின் அதில் சோம்பு சேர்த்து தாளித்துக் கொண்டு அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கி விட வேண்டும்.
இரண்டும் வதங்கிய பின் அடுத்தாக அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி விட வேண்டும். பின் தக்காளி சேர்த்து, நன்கு மசியுமாறு வதக்கி விட வேண்டும்.
தக்காளி மசிந்த பிறகு தனியா தூள், மிளகு தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் ஆகியவற்றை சேர்த்து அதன் காரத் தன்மை போகும் வரை வதக்கி விட்டு அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி சிறிது உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
பின் உதிர்த்து வைத்துள்ள இட்லிகளை சேர்த்து பிரட்டி விட வேண்டும்.பின் அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து கலவையை சுமார் 5 நிமிடங்கள் வரை பிரட்டி விட்டு இறுதியாக அரிந்த மல்லித்தழையை தூவினால் முட்டை கொத்து இட்லி ரெடி!