பத்தே நிமிடத்தில் முட்டை ஆப்பம்...அசைவ பிரியர்களே இனி சுடச் சுட ருசியுங்கள்
ஆப்பம் சைவ மற்றும் அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று.
இந்த ஆப்பம் செய்வது மிகவும் எளிமையானது.
இன்று ஆப்பத்தில் முட்டை சேர்த்து முட்டை ஆப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சரிசி - 3 கப்
- தேங்காய் துருவல் - 2 கப்
- உளுந்து - 3 தேக்கரண்டி
- வெந்தயம் - 1 தேக்கரண்டி
- சமையல் சோடா - 3 சிட்டிகை
- உப்பு - சிறிதளவு முட்டை
மசலாவிற்கு
- முட்டை - மூன்று
- சர்க்கரை - அரை தேக்கரண்டி
- மிளகுத் தூள் - 2 தேக்கரண்டி
- எண்ணெய் - ஐந்து மேசைக்கரண்டி
- நெய் - இரண்டு மேசைக்கரண்டி
செய்முறை
ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அத்துடன் சர்க்கரை, மிளகுத் தூள் சேர்த்து நன்றாக அடித்து கலந்து வைக்கவும்.
அரிசியுடன், உளுந்தையும், வெந்தயத்தையும் சேர்த்து 2 அல்லது 3 மணிநேரம் ஊற வைக்கவும்.
பின்னர் நன்கு கழுவி விட்டு, தேங்காய் துருவல் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர்விட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். பிறகு அதில் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து புளிக்க விடவும்.
ஆப்பத்திற்கு புளித்தால்தான் சாஃப்ட்டாகவும், சாப்பிட நன்றாகவும் இருக்கும்.
ஆப்பம் ஊற்றுவதற்கு முன்பு மாவில் சமையல் சோடாவைக் கரைத்து கலந்து விட்டு, ஆப்பக்கடாயில் சிறிது எண்ணெய்த் தடவி, ஒரு வெங்காயத்தைப் பாதியாக நறுக்கி தேய்த்துவிட்டு மாவைச் சட்டியில் ஊற்றி, சட்டியை இரண்டு கையால் பிடித்து சுழற்றவும்.
பின்னர் அதில் அடித்து வைத்திருக்கும் முட்டைக் கலவையை ஒரு குழி கரண்டி எடுத்து மாவின் நடுவில் ஊற்றி மறுபடியும் ஒரு முறை சுழற்றி, சுற்றிலும் நெய் ஊற்றி மூடி வேக வைத்து சுட்டெடுக்கவும்.
சுவையான முட்டை ஆப்பம் ரெடி.
இத்துடன் காரச் சட்னி, சன்னா மசாலா வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.