உணவை கையால் சாப்பிடுங்களேன்!
நாகரிகம் வளர வளர அனைத்தும் மாறிவிட்டது. அதில் உணவும் அடங்கிவிட்டது. உணவுப் பழக்கவழக்கங்கள் மாறி, தற்போது உணவு உண்ணும் முறையிலும் மாற்றம் ஏற்பட்டுவிட்டது.
தரையில் அமர்ந்து கைகளினால் உணவை உண்பதுதான் நமது பாரம்பரியமாக இருந்தது. ஆனால்,தற்போது அந்த பழக்கத்தில் மாற்றம் ஏற்பட்டு கரண்டியால் உண்பதுதான் நாகரிகம், மரியாதை என்றாகிவிட்டது.

விருப்பம் இருக்கின்றதோ, இல்லையோ பெரிய பன்னாட்டு நிறுவனங்கள், உயர்தர உணவகங்கள் என்பவற்றில் கரண்டியால் சாப்பிட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஒரு உணவை மிகவும் எளிதாக நம்மால் கையால் சாப்பிட முடிகின்றபோது, எதற்காக கரண்டியைப் பயன்படுத்த வேண்டும்.
இனி கைகளினால் சாப்பிடுவதால் என்ன பலன் என்று பார்ப்போம்.
ரசித்து ருசித்து சாப்பிடலாம்
நாம் கரண்டியினால் சாப்பிடும் பொழுது நமது கவனம், சிந்தனை முழுவதும் எப்படி கரண்டியினால் சாப்பிட்டு முடிக்கப் போகிறோம் என்பதில்தான் இருக்கும். அதனால் உணவை திருப்தியாக சாப்பிட முடியாமல் போகும். இதுவே நாம் கையினால் சாப்பிடும் பொழுது உணவை ரசித்து ருசித்து சாப்பிடுவோம்.
அதுமட்டுமல்ல உணவை கரண்டியினால் எடுத்து உண்ணும்போது அது சூடாக இருக்கின்றதா? அதன் தன்மை என்ன? என்பதை நமக்குத் தெரியாது. இதனால் நாக்கை சுட்டுக்கொள்ளவும் வாய்ப்பிருக்கின்றது.

கெட்டவை விரட்டப்படுகின்றது
நமது கை விரல்கள் ஒவ்வொன்றும் நிலம், நீர்,நெருப்பு, ஆகாயம், காற்று எனும் ஐம்பூதங்களைக் குறிக்கிறது. ஆகவே கையினால் சாப்பிடும்பொழுது கெட்ட சக்திகள் விரட்டப்படுவதாக கூறப்படுகிறது.
கரண்டியினால் சாப்பிடும்பொழுது இவை கிடைப்பதில்லை. அதுமட்டுமல்ல நாம் உண்ணும்போது கையை வைக்கும் முறையானது, யோக முத்திரைகள் மற்றும் தியானத்தைக் குறிக்கிறது.
நன்மை செய்யும் பக்டீரியாக்கள்
நாம் கையைக் கழுவி விட்டு சாப்பிடும்பொழுது நமது கையில் உள்ள நன்மை செய்யும் பக்டீரியாக்கள் வாய் மற்றும் தொண்டைக்கு நன்மை செய்து சமிபாட்டை எளிதாக்குகிறது. இதுவே கையைக் கழுவாமல் சாப்பிட்டால் கெட்ட கிருமிகள் உடலுக்குள் செல்லும்.
மன அழுத்தம்
கரண்டியை உபயோகப்படுத்தும்போது வேகமாக சாப்பிடுவதோடு, அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட்டு விடுகிறோம். இதனால் சில குறைபாடுகள் ஏற்பட்டு அது மன அழுத்தத்துக்கு வித்திடலாம்.
