பாடசாலை மாணவர்களை அடிமையாக்கும் போதைப் பழக்கம்
ஒரு மனிதனுடைய வாழ்வில் மிகவும் முக்கியமான ஒரு பருவம் என்றால் அது மாணவப் பருவம்தான்.
கல்வி கற்று அதன் மூலம் பெற்றுக்கொண்ட அறிவை வைத்து சமூகத்துக்குள் ஒரு சிறந்த மனிதனாய் தன்னால் முடிந்த பங்களிப்பை செலுத்த முடியும்.
சமீப காலமாகவே இந்த மாணவர் சமுதாயத்தை போதை என்ற விடயம் ஆட்டிப் படைக்கின்றது. பல மாணவர்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி தமது வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர்.
இதற்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் சில மாணவர்கள் போதை மாத்திரைகளை உட்கொண்டு, இன்னும் ஒரு படி மேலே போய் போதை ஊசிகளையும் செலுத்திக் கொள்கின்றனர்.
மாணவ சமுதாயத்திடையே இந்த போதை பழக்கமானது வெகுவாக தீவிரமடைந்து வருகின்றது. பெற்றோர் இந்த விடயத்தில் தத்தமது பிள்ளைகளின் மேல் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
அண்மையில் போதை மாத்திரை விற்பனை செய்ததாகக் கூறி திருச்சி கருமண்டபம் பகுதியில் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையில் உறையூரைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து போதை மாத்திரைகளை பெற்று வந்ததாகக் கூறியுள்ளார். இவ்வாறு போதைப் பொருட்களை விற்பனை செய்யும் இந்த சமூக விரோத கும்பலானது, பாடசாலை மற்றும் கல்லூரி மாணவர்களை இலக்கு வைத்து தமது தேவைகளை நிறைவேற்றி வருகிறது.
ஏதாவது ஒரு மாணவனிடம் நட்பை வளர்த்து அவர் மூலமாக ஏனைய மாணவர்களுக்கும் போதை மாத்திரைகளை விற்பனை செய்கின்றனர். அதற்குரிய பணத்தை ஒன்லைன் மூலம் குறிப்பிட்ட எண்ணுக்கு செலுத்தியதன் பின்னர் போதை மாத்திரைகள் குறிப்பிட்ட மாணவர்களை சென்றடையும்.
ஆரம்பத்தில் இந்த போதைபழக்கமானது விளையாட்டாக ஆரம்பித்தாலும் போகப் போக அதற்கு அடிமையாக்கி விடுகிறது. முன்பெல்லாம் பள்ளிக் காலத்தில் மது பாவனை, சிகரெட் பாவனை பெரும் தவறாக பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது போதை மாத்திரை, போதை ஊசி என்பன சர்வ சாதாரணமாகிவிட்டது.
தமது பிள்ளைகளை பள்ளிக்கும் கல்லூரிகளுக்கும் அனுப்பும் பெற்றோர்களின் நம்பிக்கையும் தற்சமயம் கேள்விக்குறியாகியுள்ளது. இத்தகைய நிலைமையில் கல்வியில் மட்டும் கவனம் செலுத்தும் மாணவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். இதுபோன்ற போதைவஸ்து பாவனையால் பெற்றோர்களின் கனவும் கலைந்து செல்கிறது.
மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் இதுபோன்ற சமூகவிரோத கும்பல்களை பிடித்து தகுந்த தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது. இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது...
சுய ஒழுக்கம்
சவுராஷ்டிராதெருவைச் சேர்ந்த வக்கீல் சுதர்சன்:
தனிப்பட்ட நபர்களின் சுய இலாபத்துக்காக ஒரு சமுதாயமே பாதிக்கப்படுகின்றது. பாடசாலையில் சில முக்கிய நிகழ்வுகள் நடைபெறும்போது இவ்வாறான போதை பழக்கம் தலைவிரித்தாடுகிறது. பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கவேண்டுமென பெற்றோர்கள் பாடசாலைக்கு அனுப்புகிறார்கள். ஆனால், தீய நண்பர்களுடன் சேர்ந்து சில மாணவர்கள் தவறான செயல்களில் ஈடுபடுகிறார்கள். மாணவர்கள் தெய்வ நம்பிக்கையுடன் தனி மனித ஒழுக்கத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
பெற்றோர்களுக்கு கவனம் அவசியம்
எடமலைப்பட்டிபுதூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் குமார்:
ஒரு மாணவன் தவறான பாதைக்கு செல்கிறான் என்றால் அவனது பெற்றோரின் கவனக் குறைவும் ஒரு காரணமாகும். பிள்ளைகள் வளர்ந்ததும் உறவுகளை மறந்து கொண்டாட்டம் மட்டுமே வாழ்க்கை என யோசிக்கத் தொடங்குகிறார்கள். தீய நண்பர்களுடன் சேர்ந்து தேவையற்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள். அதைத் தட்டிக்கேட்கும் பட்சத்தில் பெற்றோரை தாக்கும் அளவுக்கு போதை கண்ணை மறைத்து விடுகிறது.
விளையாட்டின் தனித்தன்மை
முன்னாள் சர்வதேச தடகளவீரர் அண்ணாவி:
தற்பொழுது பள்ளிகளில் விளையாட்டுகளுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தை விட, மதிப்பெண்களிலேயே அதிக கவனம் செலுத்தகிறார்கள். பாடசாலைகளில் விளையாட்டை ஊக்குவித்தால் போதைப் பழக்கத்திலிருந்து பல இளைஞர்களை காப்பாற்ற முடியும். மாணவர்களின் பெற்றோரும் கவனமாக இருக்க வேண்டும்.
தனிப்படை பொலிசார் கண்காணிப்பாளர்கள்
திருச்சி மாநகர பொலிஸ் துணை கமிஷ்னர் (தெற்கு) ஸ்ரீதேவி:
போதை மாத்திரைகள் விற்பனை குறித்த தகவல்களை சாதாரணமாக எடுக்க மாட்டோம். பாடசாலைகளில் விழிப்புணர்வு பேரணிகளை நடத்தி வருகின்றோம். பாடசாலைகளில் போதைப் பழக்கம் குறித்த நடவக்கை தெரிந்தால் தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தியுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.