வளர்ப்பு நாய்களுக்கும் ஜோதிடமா? தென்கொரியாவில் பிரபலமாகும் வித்தியாசமான முறை!
நம் நாடு உட்பட சில நாடுகளில் மனிதர்களின் எதிர்காலம், வாழ்க்கை நிலை, திருமணம், தொழில் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அறிந்து கொள்ள ஜோதிடம் பார்ப்பது வழக்கமாக இருந்து வருகிறது.ஆனால், தென்கொரியாவில் இதே போன்ற ஒரு வித்தியாசமான முயற்சி தற்போது கவனம் ஈர்த்து வருகிறது.
செல்ல பிராணிகளுக்க ஜோதிடமா?
அங்கு மனிதர்களுக்காக அல்லாமல், தங்களது வளர்ப்பு நாய்களின் உணர்வுகளையும் மனநிலையையும் புரிந்துகொள்ள ஜோதிடம் பார்க்கும் முறை பிரபலமடைந்து வருகிறது.

தென்கொரிய தலைநகர் சியோலில், நாய்களுக்கான ஜோதிடம் பார்க்கும் சிறப்பு கடைகள் ஆங்காங்கே செயல்பட்டு வருகின்றன.
தங்களது வளர்ப்பு நாய்களின் பழக்கவழக்கங்கள், மனநிலை மற்றும் அவற்றின் தேவைகளைப் புரிந்துகொள்ள விரும்பும் பலர், தங்கள் செல்லப்பிராணிகளுடன் இந்தக் கடைகளுக்கு வருகை தருகின்றமையால் இது இணையத்தில் வைரலாகி பெரும்பாலானவர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.

இந்த ஜோதிட முறையில், மேஜை ஒன்றின் மீது பல்வேறு குறியீடுகள் மற்றும் படங்கள் கொண்ட அட்டைகள் பரப்பி வைக்கப்படுகின்றன.
பின்னர், உரிமையாளர் தனது வளர்ப்பு நாயை அந்த மேஜையின் மீது நிற்க விடுகிறார். நாய் தனது காலால் தொடும் அல்லது தேர்வு செய்யும் அட்டையை அடிப்படையாகக் கொண்டு, அதன் மனநிலை மற்றும் உடல்நிலை குறித்து ஜோதிடர் விளக்கம் கொடுக்கின்றார்.

உதாரணமாக, வாள் போன்ற குறியீடு வரையப்பட்ட அட்டையை ஒரு நாய் தேர்வு செய்தால், அது உடல்நலப் பிரச்சினை, மூட்டு வலி அல்லது ஏதாவது அசௌகரியத்தை எதிர்கொண்டு இருக்கலாம் என்று இந்த ஜோதிட முறையை பின்பற்றி விளக்கம் கொடுக்கப்படுகின்றது.
மேலும் தங்களது செல்லப்பிராணிகள் தங்களைப் பற்றி என்ன நினைக்கின்றன, அவற்றை சரியான முறையில் பராமரித்து வருகிறோமா, அவற்றின் தேவைகளை புரிந்துகொள்கிறோமா என்பதை அறிந்து கொள்ளவே பலர் இந்த சேவையை நாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செல்லப்பிராணிகளுடன் மனிதர்கள் கொண்டுள்ள உணர்வுபூர்வமான உறவை மையமாகக் கொண்டு தென்கொரியாவில் "செல்லப்பிராணி ஜோசியம்" என அழைக்கப்படும் இந்த வித்தியாசமான நடைமுறை தற்போது பிரபலமடைந்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |