10-ம் வகுப்பு படிக்கும்போதே சினிமாவில் அறிமுகமான த்ரிஷா! உண்மையை பகிர்ந்த இயக்குநர் பிரவீன் காந்தி
Trisha cinema introduction : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக பல ஆண்டுகளாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருக்கும் நடிகை த்ரிஷாவின் சினிமா பயணம் எப்படி தொடங்கியது என்பது குறித்து இயக்குநர் பிரவீன் காந்தி பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
த்ரிஷாவுக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது?
கடந்த 1999-ம் ஆண்டு பிரவீன் காந்தி இயக்கத்தில், பிரசாந்த் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான ‘ஜோடி’ திரைப்படத்தின் மூலமே த்ரிஷா தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார்.

அந்த வாய்ப்பு அவருக்கு எப்படி கிடைத்தது? அதன்பிறகு ‘லேசா லேசா’ திரைப்படத்தில் நடித்தது எப்படி? என்பது குறித்து அவர் அளித்த பேட்டி தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகின்றது.
இயக்குநர் பிரவீன் காந்தி பேட்டி
இதுகுறித்து பேசிய பிரவீன் காந்தி, “ஜோடி படத்தின் படப்பிடிப்பு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் த்ரிஷா சர்ச் பார்க் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடுமுறையில் இருந்ததால், படத்தில் வந்து நடித்துக் கொடுத்தார். படத்தில் நாயகியுடன் இடம்பெறும் காட்சிகளுக்காக அழகான இளம் பெண்கள் தேவைப்பட்டனர்.

அப்போது தாரா உமேஷ் என்பவர் மூலம் த்ரிஷா எனக்கு அறிமுகமானார். அவரைப் பார்த்தவுடனே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. உண்மையில், அவருக்கு ஒரு பெரிய கதாபாத்திரத்தையே கொடுக்கலாம் என்று நினைத்தேன். அவருக்கு விருப்பம் இருந்தால் அந்த வாய்ப்பை வழங்க தயாராக இருந்தேன்.
ஆனால், அப்போது அவருக்கு அதில் ஆர்வம் இல்லை,” என்றார். மேலும் அவர் கூறுகையில், “த்ரிஷா சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவோ, திட்டமோ வைத்து வரவில்லை. சினிமா எப்படி இருக்கும், நல்லதா, கெட்டதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில்தான் வந்தார்.

அவரது தாயாரும் அதைப் பற்றி அறிந்து கொள்ளும் நோக்கத்திலேயே அவரை அனுப்பி வைத்தார். ஜாலியாக வந்து நடித்த அந்தப் பெண், பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக உயர்ந்தது ஆச்சரியமான விஷயம்.
ஜோடி படத்தில் நடித்த அனுபவம்தான் அவருக்கு சினிமா மீது நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தியது. அதன்பிறகு நான் இயக்குநர் பிரியதர்ஷனிடம் த்ரிஷாவைப் பற்றி கூறினேன். அதன் மூலம் ‘லேசா லேசா’ திரைப்படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

பலரும் நினைப்பது போல மாடலிங் மூலம் த்ரிஷா சினிமாவுக்கு வரவில்லை. முதலில் ஜோடி படத்தில் நடித்தார். அதன் பிறகுதான் மாடலிங் துறையில் கவனம் செலுத்தினார். பின்னர் ‘மிஸ் சென்னை’ பட்டத்தை வென்றார். அதன் பிறகு சன் டிவியிலும் தோன்றினார். அதன் பின்னரே முழுநேர நடிகையாக சினிமாவில் தனது பயணத்தை தொடங்கினார்,” என்று பிரவீன் காந்தி தெரிவித்துள்ளார். இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |