எலும்பும் தோலுமாக மாறி அனாதையாக இறந்து கிடந்த நடிகர்.... அதிர்ச்சியில் ரசிகர்கள்! தீயாய் பரவும் புகைப்படம்
அநாதையாக இறந்து கிடந்த நடிகர் ஒருவரின் வாழ்க்கை கதை அனைவரையும் கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தமிழில் வெளியான கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை என்ற படத்தை இயக்கிய இயக்குனர் ஏகாதேசி என்பவர் தனது படத்தில் நடித்த நடிகரின் மரணம் குறித்து முகநூலில் பதிவு செய்துள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது,
23 ஆண்டுகளுக்கு முன் மதுரை மாவட்டம் செக்கானூரணியில் ஒரு அழகான 16 வயது பையனை “செங்கதிர்” அச்சகத்தில் பார்த்தேன்.
அவன் பெயர் அலெக்சாண்டர். அப்போது நான் சென்னை வந்திருக்கவில்லை. நான் அந்த ஊருக்கு அருகில் உள்ள பணியான் கிராமத்தைச் சேர்ந்தவன். அந்த அச்சகம் தோழர் தேவராஜ் அவர்களுடையது.
கவிதைகள், போஸ்டர்கள் அச்சடிக்க அடிக்கடி நான் செல்வதுண்டு. நான் அங்கே செல்கிற போதெல்லாம் தம்பி அலெக்ஸோடு பிரியமாகப் பேசுவேன்.
அவனும் என் மீது மிகுந்த அன்பு காட்டுவான். நான் 1999 ல் சென்னை வந்து சினிமா துறையில் உதவி இயக்குநராகப் பணிசெய்து கொண்டிருந்தேன். 2008 ஆம் வருடம் அலெக்ஸ் சென்னை வந்து தங்கி திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்புத் தேடி அலைந்தான்.
இறுதி வரை வாய்ப்பு தேடியே வாழ்க்கையை தொலைத்த நடிகர்
2010 ல் நான் இயக்குநர் ஆனேன். என் முதல் படமான “கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை” யில் நடிக்கவைத்தேன்.
மனோபாலாவின் காமினேஷனில் வசனம் பேசி நடித்தான். அதன் பிறகு வேறு எந்தப் படத்திலும் நடித்ததாகத் தெரியவில்லை.
சென்னையைச் சுற்றிக்கொண்டு திரிந்தான். உடல் மெலியத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் அவனைப் பார்க்க எனக்கு பாவம் போல் ஆகிவிட, இவனை அவனது வீட்டில் சேர்த்துவிடலாமென்று நினைத்து முயற்சித்துப் பார்த்தேன் அவனது உறவுக்காரர்களை என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

ஆள் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கொண்டே வந்தான். ஒரு கட்டத்தில் அவனை அறையில் ஒருவர் சேர்த்துக்கொள்ள அச்சப்படும் அளவிற்கு உடல் உடை நடவடிக்கையில் மாற்றம் ஆனது.
25.04.2022 திங்கட்கிழமை காலை 8.45 க்கு ராயப்பேட்டை அரசாங்க மருத்துவமனை போலீஸ் ஸ்டேசனிலிருந்து எஸ்.ஐ. பாண்டியன் கைப்பேசியில் என்னை அழைத்து, அலெக்சாண்டர் என்பவர் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் இறந்துவிட்டார்.
இயக்குனர் செய்த உதவி
அவர் அருகே யாருமே இல்லை. நான்கு தினங்களுக்கு முன் தேனாம்பேட்டையில் ஒரு சாலையோரம் மயங்கிய நிலையில் கிடந்தவரை பொதுமக்கள் 108 ற்கு தகவல் சொல்லி இங்கே அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றிப் போனது என்றார்.
அவரின் டைரியில் உங்கள் பெயரும் எண்ணும் இருந்தது. அவருக்கு நீங்கள் என்ன வேண்டும். அவரின் உறவுக்காரர்களை உங்களுக்கு தெரியுமா? என்று சில கேள்விகளைக் கேட்டனர்.
எஸ். ஐ. பாண்டியன் அவர்களிடம் பேசிவிட்டு, அலெக்ஸின் சொந்த அண்ணனை தேடி பிடித்தேன்.
நானும் என் நண்பர் அருளும் கிளம்பி அங்கே சென்றோம். அங்கே இருந்த போலீஸ் ஸ்டேஷனில் இருந்த பாண்டியன், பத்தராயன், எஸ்.எஸ். டேனியல் ஆகிய மூன்று எஸ். ஐகளும் தன்ராஜ் என்கிற ஒரு காவலரும் எதையும் எதிர்பாராமல் எங்களுக்கு மேலான பொறுப்புடனும் அன்புடனும் சம்பிரதாயங்களை மின்னல் வேகத்தில் செய்து முடித்து “அலெக்ஸை”ஆம்புலன்ஸில் ஏற்றி மதுரை அனுப்பி வைத்தனர்.

அவர்களுக்கு இந்த நேரத்தில் ஒரு செவ்வணக்கம் வைத்துக் கொள்கிறேன். தம்பி அலெக்ஸுக்கு நான் இயக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம் கொடுப்பதாக இருந்தேன்.
அவனோ ஒரு ரோஜா மாலை மட்டும் போதும் அண்ணே என்று சென்றுவிட்டான். (போயிட்டு வாடா அலெக்ஸ்… நான் உனக்காக வைத்திருந்த கதாபாத்திரத்தில் நாளை எவராவது நடிப்பர் தானே, நான் அவர் முகத்தில் உன்னைத் தேடிக் கொள்கிறேன்.) என்று பதிவிட்டுள்ளார்.