இலங்கையில் அதி தீவிரமாக பரவும் டெங்கு: அறிகுறிகள் என்ன? தப்பித்துக் கொள்வது எப்படி?
இலங்கையில் அதி தீவிரமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர், 21,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
மழைக்காலம் தொடங்கி இருப்பதால் டெங்குவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதன் அறிகுறிகள் என்ன? தப்பித்துக் கொள்வது எப்படி? சிகிச்சை முறைகள் என்ன என்பது குறித்து தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
அறிகுறிகள்
காய்ச்சல்
சோர்வு
தலைவலி
உடல்வலி
வாந்தி
வயிற்று வலி
கண்ணுக்குப் பின்புறம் வலி
எலும்பு வலி
கண்டறிவது எப்படி?
தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேலாக காய்ச்சல் நீடித்தால், மருத்துவமனைக்குச் சென்று, என்.எஸ்.ஐ ஆண்டிஜன் (NS1 Ag), டெங்கு ஐ.ஜி.எம். (Dengue IgM ) அல்லது டெங்கு ஐ.ஜி.ஜி (Dengue IGG) உள்ளிட்ட ரத்தப்பரிசோதனைகளை செய்துகொள்ளவேண்டும்.
டெங்கு காய்ச்சலாக இருப்பின் ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கும், எனவே, ப்ளேட்லெட் (Platelet) என்னும் ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை மற்றும் ரத்தத்தின் நீர்ப்பளவு (Heamatocrit) உள்ளிட்ட பரிசோதனைகளையும் செய்து கொள்ள வேண்டும்.
தற்காத்து கொள்வது எப்படி?
* டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசுவானது நல்ல நீரில் முட்டையிட்டு பொறிக்கக் கூடியது. நம் வீட்டை சுற்றி நல்ல தண்ணீர் சேமித்து வைக்கும் சட்டி சாமான்களை மூடியிட்டு வைக்க வேண்டும்.
* வீட்டை சுற்றி பழைய டயர், காலி பாட்டில்கள், பேப்பர் கப்கள், சிரட்டைகள், இளநீர் கூடுகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* தங்கள் வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியின் பின்புறம் சேரும் தண்ணீரிலும் அந்த கொசு முட்டையிட்டு வளரும்.
* தண்ணீர் சேமித்து வைக்கும் கலன்களை ப்ளீச்சிங் பவுடர் கொண்டு வாரம் ஒருமுறையேனும் தேய்த்து கழுவ வேண்டும்.
* ஏடிஸ் கொசு பகல் நேரத்தில் மட்டுமே கடிக்கும் கொசு என்பதால் கவனமுடன் இருக்க வேண்டும்.
* தண்ணீரை கட்டாயம் காய்ச்சி பருக வேண்டும். மலம் கழித்த பின்னர் கட்டாயம் கைகளை சோப் கொண்டு கழுவ வேண்டும்.
* உணவு உண்ணும் முன்னும், சமையல் செய்யும் முன்னும் கட்டாயம் கைகளை சோப் கொண்டு கழுவுவது நல்லது.