இனி மீன் வறுவலுக்காக பீச்சுக்குச் செல்ல வேண்டாம்! அதே சுவையில் வீட்டிலேயே பண்ணலாமா?
அசைவ உணவுப் பிரியர்களின் விருப்பமான உணவுப் பட்டியலில் மீனுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. அதிலும், கடற்கரையில் கிடைக்கும் சூடான, காரசாரமான, மொறுமொறுப்பான மீன் வறுவலுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
வழக்கமான மீன் வறுவலை விட சற்று வித்தியாசமான சுவையில், பீச் ஸ்டைலில் மீன் வறுவல் செய்து பார்த்தால் எப்படி இருக்கும்? குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் இந்த ருசியான உணவை இனி சாப்பிடுவதற்காக பீச்சுக்குச் செல்ல வேண்டியதில்லை.

எளிய பொருட்களைக் கொண்டே வீட்டிலேயே பீச் ஸ்டைல் மீன் வறுவலை எப்படித் தயாரிக்கலாம் என்று இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மீன் – 1 கிலோ
பெரிய வெங்காயம் – 1
பூண்டு – 4 பல்
மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
கொத்தமல்லித்தூள் – ½ டீஸ்பூன்
மிளகுத்தூள் – ½ டீஸ்பூன்
கடலை மாவு – ½ கப்
எலுமிச்சைச் சாறு – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்குத் தேவையான அளவு

செய்முறை
முதலில் மீனை நன்றாகச் சுத்தம் செய்து கழுவி, விரும்பிய அளவில் துண்டுகளாக நறுக்கி தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
மிக்ஸி ஜாரில் பூண்டு, பெரிய வெங்காயம், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கொத்தமல்லித்தூள், எலுமிச்சைச் சாறு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த மசாலாவை மீன் துண்டுகளுடன் சேர்த்து நன்றாகப் பிரட்டி, மசாலா அனைத்து துண்டுகளிலும் படும்படி கலக்கவும்.

பின்னர் அரை மணி நேரம் ஊறவிடவும். இதற்கிடையில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மிளகுத்தூள் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து வைத்துக்கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து, மீன் துண்டுகளைப் பொரிப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும், ஊறவைத்த மீன் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து கடலை மாவுக் கலவையில் நன்றாகப் புரட்டி, சூடான எண்ணெயில் போடவும்.
மிதமான தீயில் மீன் துண்டுகளை இருபுறமும் பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் வரும் வரை வறுத்தெடுத்தால் அவ்வளவுதான் சுவையான, மொறுமொறுப்பான பீச் ஸ்டைல் மீன் வறுவல் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |