மைதானத்திலேயே இளம்பெண்ணுக்கு மோதிரம் அணிவித்து காதலை கூறிய சிஎஸ்கே வீரர் தீபக் சாஹர்... இணையத்தில் வைரலாகும் காட்சி!
சென்னை - பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடந்த பரபரப்ப போட்டியின் போது காதலிக்கு மோதிரம் அணிவித்துக் காதலை வெளிப்படுத்தியுள்ள சிஎஸ்கே வீரரின் செயல் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி இன்று (07.10.2021) துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 134 ரன்களை எடுத்தது.
அதிகபட்சமாக டு பிளசிஸ் 76 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் அணியைப் பொறுத்தவரை கிறிஸ் ஜோர்டன் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், முகமது ஷமி மற்றும் மோயிஸ் ஹென்ரிக்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து, 135 ரன்கள் எடுத்தால் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்கத்தில் கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். குறைந்த ஓவரில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்று தகுதிக்கான நான்காவது அணியாக தங்கள் அணி இருக்கும் என்ற நம்பிக்கையில் இருவரும் விளையாடினர்.
இதில், மயங்க், சர்பராஸ் கான், ஷாருக்கான், மார்க்ரம் என நான்கு பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி இருந்தாலும் பஞ்சாப் அணியை ஒற்றை ஆளாக கேப்டன் கே.எல்.ராகுல் பொளந்து கட்டினார். 42 பந்துகளில் 98 ரன்களை விளாசி பஞ்சாப் அணியை 13 ஓவர்களில் வெற்றி பெற செய்தார்.
இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப், பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்துள்ளது. இந்நிலையில், ஒரு பக்கம் சிஎஸ்கே வீரர்கள் தோல்வி சோகத்தில் இருக்க, போட்டி முடிந்ததும், சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார், இளம்பெண் ஒருவரிடம் காதலை வெளிப்படுத்தி உள்ளார்.
உடனே அப்பெண்ணும் சம்மதம் தெரிவிக்கவே இருவரும் அங்கேயே மோதிரம் மாற்றி நிச்சயம் செய்து கொண்டுள்ளனர். மேலும் , அந்த பெண் தீபக் சாஹர் காதலி என கூறப்படுகிறது. தற்போது இந்த வீடியோ தான் ட்ரெண்டாகி வருகிறது.