இறந்துவிட்டார்... பால் ஊற்றிய போது எழுந்து உட்கார்ந்த அதிசயம்!
தமிழகத்தில் இறந்ததாக நினைத்து தந்தைக்கு மகன் பால் ஊற்றியபோது அவர் திடீரென்று எழுந்து நின்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
பொருட்கள் போட்டு எரித்து சடங்கு
புதுக்கோட்டை மாவட்டம் முரண்டாம்பட்டியை சேர்ந்தவர் சண்முகம் (60) விவசாயியான இவர் தனியார் மருத்துவமனையில் இதயம் மற்றும் நுரையீரல் பாதிப்பு சம்பந்தமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறி மருத்துவர்கள் ஆம்புலன்சில் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.
முரண்டாம்பட்டி அருகே வந்த போது சண்முகம் மயங்கிய நிலையில் இருந்தார். ஊரை நெருங்கிய போது சண்முகம் இறந்துவிட்டதாக கருதிய உறவினர்கள் பல்வேறு பொருட்கள் போட்டு எரித்து சடங்குகள் செய்து பின் முரண்டாம்பட்டியில் உள்ள அவரது வீட்டின் திண்ணையில் சண்முகத்தை வைத்தனர்.
தந்தைக்கு பால் ஊற்றினார்
இதற்கிடையே சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருந்த அவரது மகன் சுப்பிரமணியன் மாலையை கழற்றினார். பின்னர் தந்தைக்கு பால் ஊற்றினார். அப்போது திடீரென்று அருள் வந்த நிலையில், என் தந்தை சாகவில்லை, அவர் பிழைத்து விடுவார் என்று கூறியுள்ளார்.
சிறிது நேரத்தில் சண்முகம் உடலில் இருந்து அசைவுகள் தென்பட்டன. இதனைக்கண்ட உறவினர் ஆச்சரியத்துடனும், பதட்டத்துடனும் அவரை பார்த்தனர். சிலர் அவரின் அருகே அமர்ந்து சத்தம் போட்டு கூப்பிட்டனர்.
கொஞ்சம் கொஞ்சமாக கண் விழித்த சண்முகம் பேசத்தொடங்கினார். இறந்துவிட்டார் என கருதப்பட்ட அவரின் உடல் நலமும் சீராகி இருந்தது அங்கிருப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.