10 நாள் ஆனாலும் கெட்டுப்போகாத.. ஆந்திரா ஸ்டைல் இஞ்சி துவையல்; ஒருவாட்டி சாப்பிட்டு பாருங்க!
பல வகையான உணவுகளை உட்கொண்டாலும், சில உணவுகள் தரும் தனிச்சுவை என்றுமே நமக்கு சிறப்பு தான். அப்படி, உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய இஞ்சியை வைத்து ஒரு துவையல் எப்படி செய்வது என்பதைப் பற்றி இங்கு பார்ப்போம்.. இந்த சட்னியை அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்து வைத்தால் 10 நாட்கள் வரை கெட்டுப் போகாது. ஆந்திரா ஸ்டைல காரசாரமா இஞ்சி துவையல் எப்படி செய்வது பார்க்கலாம் வாங்க.
செய்முறை; முதலில் இஞ்சியை நன்றாக தோல் சீவி கழுவி கொஞ்சம் பொடியாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து சுத்தம் செய்து இஞ்சி – 15 கிராம் அளவு இருந்தால் போதும். ஒரு சிறிய எலுமிச்சை பழ அளவு புளியை எடுத்து 1/4 லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றி கரைத்து தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.
இதுவும் அப்படியே இருக்கட்டும். அடுத்த படியாக, கடாயில் அடுப்பை வைத்து அதில் நல்லெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன் ஊற்றி நன்றாக காய வேண்டும். அதன் பின்பு கடலைப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்,வரமிளகாய் – 3 போட்டு, இந்த மூன்று பொருட்களும் சிவக்கும் போது இஞ்சியை சேர்க்க வேண்டும்.
இந்த இஞ்சி பச்சை வாடை போகும் வரை நன்றாக வதங்கிய பின்பு, இறுதியாக 1 ஸ்பூன் அளவு சீரகம் சேர்த்து அடுப்பை அணைத்து விடுங்கள். ஜீரகம் கருகி விடக்கூடாது. இந்த பொருட்கள் அனைத்தும் நன்றாக ஆறிய பின்பு, மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் 80 சதவிகிதம் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
கொஞ்சம் கொறகொறவென்று அரைத்தால் தான் துவையல் சுவையாக இருக்கும். இதுவும் அப்படியே இருக்கட்டும். மீண்டும் அடுப்பில் கடாயை வைத்து, 1 ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் விட்டு, கடுகு, வரமிளகாய், கருவேப்பிலை தாளித்து, கரைத்து வைத்த புளியை கடாயில் ஊற்றி விடுங்கள். இதோடு மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன், தேவையான அளவு உப்பை சேர்த்து, புளி தண்ணீரை நன்றாக கொதிக்க விடுங்கள்.
இரண்டு நிமிடம் தண்ணீர் தளதளவென கொதித்து வந்தவுடன் மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் பொடியை புளி தண்ணீரோடு சேர்த்து கரண்டியால் கலக்கி விட்டு கொண்டே இருக்க வேண்டும். இது ஐந்து நிமிடங்களில் சுண்டி துவையல் பதத்திற்கு வந்துவிடும். அடுப்பை சிம்மில் வைத்து விட்டு எண்ணெய் தனியாக பிரிந்து வரும் வரை சிவக்க விடுங்கள்.
அதன்பின்பு அடுப்பை விட்டு இறக்கி, நன்றாக ஆறவிட்டு கண்ணாடி பாட்டிலில் சேகரித்து ஃபிரிட்ஜில் வைத்து விட்டால் 10 நாட்கள் வரைகூட கெட்டுப்போகாது.இதில் நீங்கள் கவனிக்க பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த சட்னிக்கு எண்ணெய் உப்பு காரம் எல்லாம் ஒரு படி அதிகமாக இருக்க வேண்டும். முயற்சி செய்து ருசித்து பாருங்கள்...