வாட்ஸ் அப்பில் மகள் அனுப்பிய புகைப்படம்- மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட பெற்றோர்கள்
ஒரே மகள் காதல் திருமணம் செய்துகொண்டதால் மனமுடைந்த பெற்றோர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து குன்னத்தூர் அருகே பொளையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி(65) இவரது மனைவி சுமதி (55). இந்த தம்பதியினர்களுக்கு ஜனனி (23) என்ற மகள் உள்ளார்.
இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பிசியோதெரபி டாக்டருக்கு மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இதையடுத்து, ஜனனிக்கு உறவினர் முறை ஆன அதே பகுதியை சேர்ந்த இறைச்சிக்கடை நடத்திவரும் சம்பத் (41) என்பவருக்கும் இடையே காதல் இருந்து வந்துள்ளது.
ஜனனியின் காதலுக்கு அவரது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். கொரோனா தொற்று ஊரடங்கால் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்த ஜனனி செய்வதறியாமல் தவித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், மீண்டும் கல்லூரி திறக்கப்பட்ட பின்னர், இதை நல் வாய்ப்பாக நினைத்த ஜனனி கோவையில் சம்பத்தை நேற்று திருமணம் செய்துள்ளார். நீண்ட நேரமாக ஜனனி வீட்டுக்கு திரும்பாததால் பதறிப்போன பெற்றோர் அவருக்கு பல முறை போனில் தொடர்பு கொண்டுள்ளனர்.
ஆனாலும், இவர்கள் அழைப்புகளை ஏற்காத ஜனனி இரவு தனது தந்தையின் வாட்ஸ் அப்பிற்கு கோவையில் தனது காதலனுடன் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்து தாங்கள் திருமணம் செய்து கொண்டதற்கான போட்டோவையும் அனுப்பி வைத்துள்ளார்.
இதனைக்கண்டு, மனமுடைந்த ஜனனியின் தாய், தந்தை இருவரும் பார்த்து, பார்த்து வளர்த்த ஒரே மகள் தங்களை நிராகரித்து விட்டு தனியாக முடிவெடுத்து திருமணம் செய்து கொண்டதை நினைத்து, தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து வாழைப்பழத்தில் விஷ மாத்திரையை வைத்து சாப்பிட்டுவிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
இதன்பின்னர் காலை வீட்டுக்கு வந்த உறவினர் கதவு தாழிடப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்து உள்ளே சென்று பார்த்த போது கணவன் மனைவி இருவரும் இறந்து கிடந்தது தெரியவந்ததுள்ளது.
இதுகுறித்து,குன்னத்தூர் போலீசாருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதங்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.