நீங்களொரு மாமியாரா? மருமகளின் அறியாத பல உண்மைகள்
பொதுவாக ஒரு பெண் திருமணம் முடித்து புகுந்த வீட்டுக்குள் செல்லும்போது அங்கே, புதிய உறவுகள், புதிய சூழல் என்பவற்றை எதிர்கொள்ள தயாராகின்றனர்.
அதிலும் குறிப்பாக பல குடும்பங்களில் மாமியார் - மருமகள் உறவு என்பது எலியும் பூனையுமாகத் தான் இருக்கின்றது. அதற்கு பல காரணங்கள் உள்ளன.
ஆரம்பத்திலேயே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடக்க வேண்டும். இனி ஒரு மருமகள் தனது மாமியாரிடம் என்னென்ன விடயங்களை எதிர்பார்ப்பார்கள் என்று பார்ப்போம்.
முகத்துக்கு நேராய் சொல்லிவிடுங்கள்
மருமகளிடம் உள்ள குறைகளை கூற வேண்டுமானால், அவரின் முகத்துக்கு நேராக கூறுங்கள். அதைவிடுத்து அவரின் முதுகுக்கு பின்னால் கூறுவது, இருவருக்கும் இடையேயான உறவை முறித்துவிடும்.
சோதிக்காதீர்கள்
மருமகள் என்ன செய்கின்றாள், நமது வீட்டுக்கு ஏற்றவள்தானா என்று அடிக்கடி சோதிப்பதை நிறுத்துங்கள். ஏனென்றால் இது அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.
மருமகளின் தவறை மாத்திரம் சுட்டிக் காட்டாதீர்கள்
மகன் - மருமகள் இருவரில் உங்கள் மருமகளின் தவறுகளை மட்டும் சுட்டிக்காட்டுவதை நிறுத்துங்கள். இரண்டு பக்க நியாயத்தையும் கேட்பது பெரியவர்களின் கடமையாக இருக்கின்றது.
இரகசியத்தை பாதுகாத்து வையுங்கள்
மருமகள் கூறும் இரகசியங்களை மகனிடம் கூறிவிடாமல் பாதுகாப்பாக வைத்திருங்கள்.
உங்கள் பழக்கவழக்கங்களை திணிக்காதீர்கள்
புகுந்த வீட்டினரின் பழக்கவழக்கங்களை மருமகளை கடைபிடித்துதான் ஆக வேண்டும் என வற்புறுத்தக் கூடாது. என்னதான் மருமகள் என்றாலும் அவரவருக்கென்று மனது இருக்கின்றது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.