இட்லி தோசைக்கு சூப்பரான கறிவேப்பிலை பொடி! ஈஸியாக தயார் செய்வது எப்படி?
நம்முடைய அன்றாட உணவுகளில் தவறாமல் இடம்பிடிக்கும் ஒரு உணவுப்பொருளாக கறிவேப்பிலை உள்ளது. இந்த அற்புத இலைகள் உணவில் கூடுதல் சுவையைக் கொடுக்க வல்லதாக உள்ளது. இவற்றின் மணமணக்கும் நறுமணம் உணவுகளை ருசி பார்க்க நம்மை சுண்டி இழுக்கிறது. இவற்றை நாம் எந்தவொரு உணவில் வேண்டுமானாலும் சேர்த்து ருசிக்கலாம்.
கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, பி12 போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. இவற்றின் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் காரணமாக இவை மிக அதிகமாக பரிந்துரைக்கப்படுகிறது.
மூளை சிறந்த முறையில் செயல்பட வேண்டுமெனில் தினமும் கறிவேப்பிலையை சாப்பிட உணவியல் நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
வாயு, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை குணப்படுத்த கறிவேப்பிலை உதவுகிறது.
குடல் இயக்கத்திற்கு உதவ, காலையில் வெறும் வயிற்றில் சில பச்சை கறிவேப்பிலையை மென்று சாப்பிடலாம்.
தினமும் 10 கறிவேப்பிலை இலைகளை சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்த சோகை நோய் ஏற்படாமல் தடுக்கலாம்.
கர்ப்பிணிகள் குமட்டல் ஏற்படும் போது கறிவேப்பிலையை சாப்பிடலாம்.
கறிவேப்பிலை வயிற்றில் முக்கிய செரிமான நொதிகளை வெளியிட உதவுகிறது, இதன் மூலம் காலை சுகவீனத்தை நீக்குகிறது.
கறிவேப்பிலை பொடி தயார் செய்யத் தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை – 2 கப்
மிளகு – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்
புளி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி விதை – 1 டீஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் விட்டு காயவைக்கவும்
பின்னர் அதில் மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு, புளி, கொத்தமல்லி விதை ஆகிவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும்.
அடுப்பை அணைத்து, அதிலிருக்கும் சூட்டிலேயே கறிவேப்பிலையை சேர்த்து லேசாகப் பிரட்டி எடுக்கவும்.
இவையனைத்தையும் மிக்ஸியில் இட்டு, அத்துடன் பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக பொடியாக அல்லது நொறுநொறுப்பாக அரைத்துக்கொள்ளவும்.
இப்போது சூப்பரான மற்றும் இட்லி, தோசைகளுக்கு ஏற்ற கறிவேப்பிலை பொடி தயாராக இருக்கும். அவற்றை காற்று புகாத கண்ணாடி டப்பாவில் சேர்த்து வைத்து 1 மாதம் வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.