பிராமின் என பேசிய கிரிக்கெட் சுரேஷ் ரெய்னாவிற்கு எழுந்த கடும் கண்டனம்! கொந்தளித்த ரசிகர்கள்
தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் வர்ணனை மேற்கொண்ட சுரேஷ் ரெய்னா ‘நான் ஒரு பிராமின்’ என்று கூறிய தகவல் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
தமிழ்நாடு ப்ரீமியர் லீக் போட்டிகள் தொடங்கி விருவிருப்பாக நடந்து வருகின்றன. அதில் ஒரு ஆட்டத்தின் வர்ணனையின்போது காணொலி மூலமாக சிஎஸ்கே அணி வீரர் சுரேஷ் ரெய்னா இடம் பெற்றார்.
அப்போது அவரிடம் சென்னை கலாச்சாரத்தை எளிதில் உள்வாங்கி கொண்டது பற்றி கேட்டபோது அதற்கு அவர் “ஆம், நானும் பிராமின் தான் என்று நினைக்கிறேன். நான் 2004 முதல் சென்னையில் ஆடிவருகிறேன். எனக்கு இந்த கலாச்சாரம் பிடித்துள்ளது.
என் அணி சக வீரர்களை நேசிக்கிறேன். நான் அனிருதா ஸ்ரீகாந்த்துடன் ஆடியுள்ளேன், பத்ரிநாத், எல்.பாலாஜியுடன் ஆடியிருக்கிறேன். சிஎஸ்கேவில் நல்ல நிர்வாகம் உள்ளது. நாங்கள் எங்களைக் கண்டுப்பிடித்துக் கொள்ள நிறைய உரிமை உள்ளது.
நல்ல கலாச்சாரம், அதை நேசிக்கிறேன். சிஎஸ்கே அணியில் இடம்பெற்றிருப்பது என் அதிர்ஷ்டம் ” என்றார்.
நான் ஒரு பிராமின் என்றும், சென்னை கலாச்சாரத்தை ஒரு குறிப்பிட்ட சமூகத்துடன் அடையாளப்படுத்தியும் அவர் பேசியதாக சமூக ஊடகங்களில் ரெய்னாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.