கிராமத்து ஸ்டைலில் நாவுக்கு ஏற்ற காரசாரமான நண்டு மசாலா
நண்டு நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரை கிளிசரைடு அளவை குறைக்கும்.
எனவே வாரத்தில் இரண்டு முறையாவது உணவில் கட்டாயம் நண்டு சேர்த்து கொள்ள வேண்டும்.
நண்டை சூப், குழம்பு, கிரேவி, ரசம் என்று எப்படி வேண்டுமானாலும் நாம் சுவைக்கலாம். அந்த வகையில் இன்று நண்டு மசாலா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- நண்டு - 1/2 கிலோ
- சின்ன வெங்காயம் - 15
- தக்காளி - 2
- நல்லெண்ணெய் தேவையான அளவு
- சோம்பு - 1 தேக்கரண்டி
- சீரகம் - 1 தேக்கரண்டி
- மிளகு - 1 தேக்கரண்டி
- தேங்காய்த்துருவல் - 4 மேசைக்கரண்டி
- வர மிளகாய் - 4
- இஞ்சி - சிறிதளவு
- பூண்டு - தேவையான அளவு
- தனியா - 2 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- கருவேப்பிலை - சிறிதளவு
- மல்லித்தழை - சிறிதளவு
- கிராம்பு - 1
- பட்டை - 1
- லவங்கம் - 1
- ஏலக்காய் - 1
செய்முறை
அடுப்பில் கடாயை வைத்து ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு அதில் மிளகு, சீரகம், சோம்பு, வர மிளகாய், இஞ்சி, பூண்டு, தனியா ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து மிதமான சூட்டில் பொன்னிறமாக வறுக்கவும்.
பிறகு தேங்காய் துருவலை சேர்த்து லேசாக வறுத்து அடுப்பை அணைத்து விடவும். இந்த கலவை நன்றாக ஆறிய பின்பு மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் கடாயை வைத்து அதில் நல்லெண்ணெய் விட்டு அதில் கிராம்பு, பட்டை, ஏலக்காய், இலவங்கம் ஆகியவற்றை சேர்க்கவும்.
பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயத்தை போட்டு நன்றாக வறுக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக மாறியவுடன் பொடியாக நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும். இவை நன்றாக வதங்கிய பிறகு அரைத்து வைத்திருக்கும் மசாலாவை அதில் சேர்க்கவும்.
மிதமான சூட்டில் இதில் சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் அளவிற்கு கலந்து விடவும். அதன் பிறகு சுத்தம் செய்து வைத்துள்ள நண்டை அதில் சேர்த்து நன்றாக பிரட்டவும்.
2 நிமிடம் கழித்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். நண்டு நன்றாக வெந்து மசாலா தயார் ஆனதும் கறிவேப்பில்லை, கொத்தமல்லி தழை தூவி இறக்கி விடவும்.
இப்பொழுது காரசாரமான நண்டு மசாலா தயார் ஆகிவிட்டது. இந்த நண்டு மசாலா சாதம், ரசம், தயிர் போன்ற அனைத்து உணவுகளுக்கும் நல்ல காம்பினேஷன்.