நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொத்தமல்லி துவையல்... எப்படி செய்வது?
வைச சமையலாக இருந்தாலும் சரி அசைவ சமையலாக இருந்தாலும் சரி அதில் கொத்தமல்லி முக்கிய இடம் வகிக்கின்றது.இதற்கு முக்கிய காரணம் அதன் தனித்துவமான மணமும் சுவையும் தான்.
அன்றாட உணவுகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் கொத்தமல்லியில் ஏராளமான மருத்துவ குணங்களும் ஊட்டச்சத்துக்களும் செறிந்து காணப்படுகின்றது.
இதில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி, நார்ச்சத்து, இரும்புச் சத்து, மெக்னீசியம், கால்சியம், வைட்டமின் கே, பாஸ்பரஸ் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் கொத்தமல்லி இலையில் காணப்படுகின்றது.
கொத்தமல்லி இலையில் உள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் ஏ உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த பெரிதும் உதவுகின்றது.
இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்த கொத்தமல்லியை கொண்டு நாவூரும் சுவையில் எவ்வாறு துவையல் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
சின்ன வெங்காயம் - 25
பூண்டு - 25 பல்
இஞ்சி - 2 இன்ச் (பொடியாக நறுக்கியது)
வரமிளகாய் - 15
கொத்தமல்லி - 2 கட்டு
புளி - 1 எலுமிச்சை அளவு(நீரில் ஊற வைத்தது)
உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு தேவையானவை
நல்லெண்ணெய் - 4 மேசைக்கரண்டி
தாளிப்பு வடகம் - சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு எலுமிச்சை அளவு புளியை ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊறவைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் இஞ்சி ஆகியவற்றை சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் வரமிளகாயையும் சேர்த்து ஓரிரு நிமி்டங்களுக்கு நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதன் பின்பு சுத்தம் செய்யப்பட்ட கொத்தமல்லியை சேர்த்து நன்றாக வதக்கிய பின்னர் இறக்கி ஆறவிட வேண்டும்.
அவை ஆறியதும் ஒரு மிக்சர் ஜாரில் சேர்த்து, அத்துடன் ஊற வைத்த புளி சாற்றையும் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பை தூவி மென்மையான பதத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பு வடகத்தை சேர்த்து தாளித்து, அரைத்த துவையலை சேர்த்து கிளறிவிட்டு இறக்கினால் அவ்வளவு தான், ஆரோக்கியம் நிறைந்த கொத்தமல்லி துவையல் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |