பிரியாணி சுவையை மிஞ்சும் கொத்தமல்லி பட்டாணி சாதம்... இப்ப செய்து பாருங்க
தினசரி ஒரே மாதிரி சமையல் செய்து அழுத்துவிட்டதா? இலகுவாக மதிய உணவை தயார் செய்ய வேண்டும் ஆனால் அதே நேரம் சுவையும் அசத்தலாக இருக்க வேண்டும் என நினைக்கின்றீர்களா?
அப்போ அவைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் பிரியாணியையே மிஞ்சும் அளவுக்கு அசத்தலான சுவையில் கொத்தமல்லி பட்டாணி சாதம் செய்து கொடுங்க. எப்படி எளிமையான முறையில் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி - 1 கப்
மசாலா அரைப்பதற்கு தேவையானவை
பட்டை - 3 சிறிய துண்டு
ஏலக்காய் - 2
கிராம்பு - 4
அன்னாசிப்பூ - சிறிதளவு
ஜாவித்ரி - சிறிதளவு
மல்லி - 1 1/2 தே.கரண்டி
முந்திரி - 5
பச்சை மிகாய் - 4
கொத்தமல்லி - சிறிது
புதினா இலைகள் - 5
தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு தேவையானவை
எண்ணெய் - 1 1/2 மேசைக்கரண்டி
சீரகம் - 1/2 தே.கரண்டி
மிளகு - 1/2 தே.கரண்டி
வெங்காயம் - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 தே.கரண்டி
பெரிய தக்காளி - 1 (நறுக்கியது)
பச்சை பட்டாணி - 1/2 கப்
உருளைக்கிழங்கு - 2 (துண்டுகளாக்கப்பட்டது)
உப்பு - சுவைக்கேற்ப
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
தண்ணீர் - 1 1/2 கப்
நெய் - 2 தே.கரண்டி
செய்முறை
முதலில் பாசுமதி அரிசியை நன்றாக தண்ணீரில் இரண்டு முறை கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு, அரிசு முழுமையாக மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி 30 நிமிடங்கள் வரையில் ஊறவிட வேண்டும்.
அதற்கிடையில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாவித்ரி, அன்னாசிப்பூ, ஏலக்காய், மல்லி ஆகியவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் முந்திரி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா ஆகியவற்றையும் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், மிளகு போட்டு தாளித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் வெங்காயத்தை சேர்த்து பொன்நிறமாக மாறும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தக்காளி சேர்த்து மென்மையாக வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்பு பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு, மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சிறிது மஞ்சள் தூளையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி, நன்றாக கொதிக்க விட வேண்டும். நீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் ஊற வைத்துள்ள பாசுமதி அரிசியை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
ஆறியதும் குக்கரைத் திறந்து, அதில் 2 டீஸ்பூன் நெய் ஊற்றி பரிமாரினால் அவ்வளவு தான் அருமையான சுவையில் கொத்தமல்லி பட்டாணி சாதம் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |