ஊரடங்கில் கஷ்டத்திற்காக பேராசிரியர் செய்த வேலை... உயிரிழந்த பரிதாபம்! கதறும் கர்ப்பிணி மனைவி
ஊரடங்கில் ஏற்பட்ட வறுமை காரணமாக, நுங்கு வெட்ட சென்ற பேராசிரியர் பரிதாபமாக உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை செங்குன்றத்தை அடுத்த அலமாதி நேதாஜி நகரை சேர்ந்தவர் லோகநாதன்(34). இவர் ஆவடியை அடுத்த வெள்ளானூரில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு சாந்தி என்ற மனைவியும் 2 வயது ஆண்குழந்தை ஒன்றும் இருந்த நிலையில், மனைவி இரண்டாவது கர்ப்பமாக இருந்துள்ளார்.
கொரோனா பரவலால் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் வருமானம் இல்லாமல் லோகநாதன் தவித்து வந்துள்ள நிலையில், குடும்ப வறுமையின் காரணமாக அவ்வப்போது பனைமரம் ஏறி நுங்கு அறுத்து கொடுத்து பணத்தில் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் லோகநாதன், பனை மரத்தில் ஏறி நுங்கு வெட்டிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.
இதில் பலத்த காயம் அடைந்த லோகநாதனை, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கல்லூரி பேராசிரியர் லோகநாதன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் மனைவி தனது 2 வயது குழந்தையுடன் கண்ணீருடன் காணப்படுகிறார்.
இவர்களுக்கு அரசு உதவ வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.