ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு லிட்டர் நாகப்பாம்பு விஷம்! அதிர்ச்சியில் வனத்துறையினர்
ஒடிசாவில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு லிட்டர் நாகப்பாம்பு விஷத்தை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் வனச்சரக அதிகாரிகள் பாம்பு விஷம் கடத்தும் கும்பல் ஒன்றை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். புவனேஸ்வர் மாவட்ட வன அதிகாரி அசோக் மிஸ்ரா கூறுகையில், பாம்பு விஷம் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஒரு பெண் உட்பட 6 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து ஒரு லிட்டர் கொடிய பாம்பின் விஷம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார். பாம்பு விஷம் வாங்குபவர்களை போல வனத்துறையினர் நாடகமாடி பாம்பு விஷம் கடத்தும் கும்பலை கைது செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த பாம்பு விஷத்தை 10 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்வதற்காக அவர்கள் விலை பேசியுள்ளனர். இதற்காக 5மிமீ அளவு கொண்ட மாதிரிகளை அவர்கள் சேம்பிளுக்காக வைத்திருந்ததாக அசோக் கூறினார்.
இருப்பினும் வனத்துறையினரிடம் சிக்கியவர்களிடம் விசாரித்த போது, அந்த குடுவைகளில் என்ன இருந்தது என்று தங்களுக்கு தெரியாது என்றும் இந்த குடுவையில் மருந்து இருப்பதாக தெரிவித்துள்ளார். பறிமுதல் செய்யப்பட்டுள்ள ஒரு லிட்டர் விஷத்தில் மதிப்பு சர்வதேச சந்தையில் ஒரு கோடி ரூபாய்க்கு அதிகம் என்றும், ஒரு லிட்டர் விஷத்தை சேகரிப்பதென்றால் 200 நாகங்களிலிருந்து விஷம் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் வன அதிகாரி அசோக் மிஸ்ரா கூறினார்.
வனவிலங்கு பாதுகாப்பு தடை சட்டத்தின் 9, 39, 44, 49 மற்றும் 51 என 5 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்து மேற்கண்ட 6 பேரும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.