ஜனநாயகன் ஓபனிங் காட்சியில் தேம்பி தேம்பி அழுத அமைச்சர் பர்வேஷ்!
முதல்வர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், புதுக்கோட்டையில் உள்ள திரையரங்கில் இப்படத்தை பார்த்த அமைச்சர் பர்வேஸ் கண்ணீர் விட்டு அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அமைச்சரின் நெகிழ்ச்சி
ஆதரவாளர்களுடன் திரையரங்கில் அமர்ந்து படம் பார்த்த அமைச்சர் பர்வேஸ், விஜய்யின் அறிமுகக் காட்சி வந்தபோதே உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விடத் தொடங்கினார். பின்னர் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் கர்சீப் மூலம் துடைத்துக் கொண்டார்.அவரது அருகில் இருந்த உதவியாளரும் இதனால் ஆச்சரியமடைந்தார்.

விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 950 திரையரங்குகளிலும், உலக அளவில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் வெளியாகியுள்ளது.
இதையொட்டி பல்வேறு பகுதிகளில் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். முன்னதாக சென்சார் தொடர்பான பிரச்சனைகளால் தாமதமான இப்படம் தற்போது வெளியான நிலையில், இணையத்தில் படம் கசிந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், பல்வேறு மாவட்டங்களில் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் முதல் காட்சியை பார்த்து வருகின்றனர்.

அந்த வகையில் புதுக்கோட்டையில் அமைச்சர் பர்வேஸ் ‘ஜனநாயகன்’ படத்தை பார்த்தபோது, விஜய்யின் கடைசி திரைப்படம் என்ற உணர்வால் அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால், படத்தில் எந்த காட்சி அவரை இவ்வளவு பாதித்தது என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும், எம்ஜிஆர் நடித்த ‘மீனவ நண்பன்’ திரைப்படம் அவர் முதல்வரான பிறகு வெளியானதைப் போல, தற்போது விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படமும் அவர் முதல்வரான பிறகு வெளியாகியுள்ளது என தவெக தொண்டர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.