பிள்ளைகளின் பிரிவு பெற்றோரின் கவலைக்கு காரணமாகின்றது!
குழந்தைகள் என்பது ஒரு வரம். முன்பெல்லாம் குடும்பங்களில் குறைந்தது ஆறு குழந்தைகளாவது இருப்பார்கள். ஆனால், காலம் மாற மாற வீட்டுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதே தற்போது அபூர்வமாகிவிட்டது.
சில வீடுகளில் தாய், தந்தை இருவரும் வேலைக்குச் சென்றுவிடுவதால் பிள்ளைகளைக் கவனித்துக் கொள்வதற்காக வேலையாட்களை நியமிக்கிறார்கள்.
இருப்பினும் இன்னும் சில வீடுகளில் குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதற்காக அதிக முயற்சி செய்வார்கள். தங்களது விருப்பங்களை தியாகம் செய்து குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவார்கள். இவ்வாறு பார்த்து பார்த்து வளர்க்கும் குழந்தைகள் தங்களை விட்டு கல்வி, வேலை, திருமணம் என தனியாக செல்லும்பட்சத்தில் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பெற்றோருக்கு இல்லாமல் மனதளவில் பெரிதும் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.
காலத்தின் கட்டாயத்தினால்தான் இவ்வாறு நடக்கின்றது என்றாலும் அதை பெற்றோரால் குறிப்பாக, தாய்மாரால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. நம்முடைய பிள்ளைகள் தொலைதூரம் சென்று என்ன செய்யப் போகிறார்கள்? எவ்வாறு தனியாக சமூகத்தை எதிர்கொள்ளப் போகிறார்கள்? சரியாக சாப்பிடுவார்களா? இதுபோன்ற கவலை அவர்களை ஒரு நிலையில் இருக்க விடுவதில்லை.
சிறுவயதிலிருந்து நம் கையைப் பிடித்து நம்மோடு நடந்த பிள்ளைகள் திடீரென்று தன்னிச்சையாக செயல்படுவதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. கண்டிப்பாக பெற்றோர் ஒரு விடயத்தை புரிந்துகொள்ள வேண்டும். ஒரு கட்டத்துக்கு மேல் பெற்றோராக பிள்ளைகளின் வாழ்வில் அவர்களின் பங்கு மாறிவிட்டதே தவிர, முடிவடைந்துவிடவில்லை.
பிள்ளைகள் வளர்ந்ததும் அவர்களை தன்னிச்சையாக செயல்பட விடவேண்டும். அவர்களின் முடிவுகளை அவர்களே எடுக்க சுதந்திரம் கொடுக்க வேண்டும். அவர்களுக்கான தனிப்பட்ட நேரத்தை கொடுக்க வேண்டும்.
எந்நேரமும் பெற்றோரின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் பிள்ளைகளால் சமூகத்தை சமாளிக்க முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.