மொறுமொறுப்பான சிக்கன் ஸ்டிக்... செய்து பார்க்கலாம் வாங்க
சிக்கனை வைத்து பலவிதமான உணவுகளை செய்ய முடியும். சிக்கன் குழம்பு, சிக்கன் வறுவல், சிக்கன் லொலிபொப் என பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.
இனி இந்த சிக்கனை வைத்து சிக்கன் ஸ்டிக் எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்...
தேவையான பொருட்கள்
எலும்பில்லாத சிக்கன் - 1 கப்
உருளைக்கிழங்கு - 2
முட்டை - 2
வெங்காயம் - 1 தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது)
குடைமிளகாய் - 1 தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - 1 தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
இஞ்சி, வெள்ளைப் பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மசாலா தூள் - 1 தேக்கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி
ஆரிகானோ - 1 தேக்கரண்டி
ப்ரெட் தூள் - தேவையான அளவு
கபாப் ஸ்டிக் - 10
எண்ணெய் - தேவையான அளவு
சில்லி ப்ளேக்ஸ் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் சிக்கனை வேகவைத்து உதிர்த்து கொள்ளவும்.
பின்னர் உருளைக்கிழங்கை தோலுரித்து மசித்து கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்துக் கொள்ளவும்.
சிக்கன், மசித்த உருளைக்கிழங்கு, வெங்காயம், குடைமிளகாய், கொத்தமல்லி, இஞ்சி வெள்ளைப் பூண்டு விழுது, ஆரிகானோ, மசாலாத் தூள், மிளகாய் தூள், சில்லி ப்ளேக்ஸ், நெய் என்பவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக பிசைந்து இறுதியாக 2 தேக்கரண்டி ப்ரெட் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
பின்னர் ஒரு தட்டில் ப்ரெட் தூளை கொட்டி பரப்பி வைக்கவும்.
அதன் பின்னர் இரண்டு கபாப் ஸ்டிக்கை எடுத்து அதில் சிக்கன் மசாலாவை ஒரு சிறிய உருண்டை இளவு எடுத்து கபாப் ஸ்டிக்கில் வைத்து தட்டையாக தட்டவும்.
இறுதியாக கடாயில் எண்ணெய் ஊற்றி செய்து வைத்த ஸ்டிக்கை முட்டை கலவையில் போட்டு ப்ரெட் தூளில் பிரட்டி பின்னர் பொரித்தெடுக்கவும்.
அருமையான சிக்கன் ஸ்டிக் தயார்.