Potato Fry: செட்டிநாட்டு பாணியில் உருளைக்கிழங்கு வறுவல்
பொதுவாக அசைவ பிரியர்களும் விரும்பும் சைவ உணவு என்றால் அது நிச்சயம் உருளைக்கிழங்காகத்தான் இருக்கும். அந்தளவுக்கு உருளைகிழங்கு தனித்துவமாக சுவை கொண்டதாக காணப்படுகின்றது.
உருளைக்கிழங்கு எந்த வகையான காய்கறியுடனும் சேர்த்து சமைக்கக்கூடியதாக இருப்பது இதன் சிறப்பம்சமாகும்.
உருளைக்கிழங்கில் குறிப்பிடத்தக்க அளவு நார்ச்சத்து உள்ளது, இது செரிமானத்தை ஊக்குவிக்கிறது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கிறது.
குறைந்த இரத்த அழுத்தம் அபாயத்தைக் குறைக்கவும் உதவுவதுடன் சருமத்தை என்றும் இளமையாக வைத்துக்கொள்வதில் உருளைக்கிழங்கு முக்கிய இடம் வகிக்கின்றது.
உருளையில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இருதய நோயாளிகளுக்கும், ரத்த கொதிப்பு காரர்களுக்கும் இது மிகவும் நல்லது. இவ்வளவு நன்மைகள் நிறைந்த உருளைக்கிழங்கை வைத்து செட்டிநாட்டு பாணியில் இட்டகாசமான சுவையில் எவ்வாறு உருளைக்கிழங்கு வறுவல் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 1/2 கிலோ
எண்ணெய் - 2 தே.கரண்டி
கடுகு - 1 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1தே.கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
வறுத்து பொடி செய்வதற்கு தேவையானவை
கடலைப் பருப்பு - 1 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தே.கரண்டி
சீரகம் - 1 தே.கரண்டி
மிளகு - 1/2 தே.கரண்டி
சோம்பு - 1/2 தே.கரண்டி
வரமிளகாய் - 5
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 2
செய்முறை
முதலில் உருளைக்கிழங்கை சுத்தம் செய்து குக்கரில் போட்டு, கிழங்கு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 2 தொடக்கம் 3 விசில் வரையில் வேகவைத்து இறக்கி ஆறவிட வேண்டும்.
ஆறியதும் கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக வெட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம், மிளகு, சோம்பு, வரமிளகாய், பட்டை, கிராம்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுத்து இறக்கி குளிரவிட்டு ஒரு மிக்சர் ஜாரில் போட்டு பொடியாக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்க வேண்டும்.
பின்னர் அதனுடன் உருளைக்கிழங்கை சேர்த்து 2 நிமிடங்கள் வரையில் நன்றாக வதக்க வேண்டும். பின்பு அதனுடன் பெருங்காயத் தூள், சுவைக்கேற்ப உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
மொறுமொறுவென்ற பதத்துக்கு வரும் வரையில் குறைவான தீயில் வறுத்து இறக்கினால், அசத்தல் சுவையில் செட்டிநாடு உருளைக்கிழங்கு வறுவல் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |